×

புளியந்தோப்பு பகுதியில் கொலை திட்டம் கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கைது: கூட்டாளிகளும் பிடிபட்டனர்

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் பதுங்கியிருந்து ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய, கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. புளியந்தோப்பு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிவதாக, புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, நரசிம்மர் நகர் பகுதியில் பதுங்கியிருந்த 5 பேர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், பிடிபட்ட 5 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

அதில், கூலிப்படை தலைவனும், பிரபல ரவுடியுமான ஆற்காடு சுரேஷ் (41) மற்றும் அவரது கூட்டாளிகள் மாரி, சந்திரகாந்த், அருண், ராஜா என்பதும், இவர்கள் ஒருவரை கொலை செய்ய அங்கு பதுங்கி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. ஆற்காடு சுரேஷ் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பூந்தமல்லியில் நடந்த சின்னா கொலை வழக்கு, புளியந்தோப்பில் நடந்த ராதாகிருஷ்ணன் கொலை வழக்கு, கே.கே.நகரில் நடந்த கதிரவன் கொலை வழக்கு உள்ளிட்ட 7 கொலை வழக்கு உள்ளன.

13க்கும் மேற்பட்ட முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கொலை செய்ய திட்டமிட்ட நபர் யார், எதற்காக கொல்ல வந்தனர் உள்ளிட்டவை குறித்து கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arcot Suresh ,area ,allies ,Pulianthope , Puliyanthoppu, murdered, mercenary, head, Arcot Suresh, arrested
× RELATED பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு...