×

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், ஃபானி புயல் இன்று அதிகாலை அதிதீவிர புயலாக வலுபெற்று தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு 575 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலு பேசிய அவர் கூறுகையில், இது தொடர்ந்து வலு பெற்று நாளை மாலை வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்கரையை நோக்கி செல்லக்கூடும்.

பலத்த காற்றை பொறுத்தவரையில், குமரிக்கடல், மன்னார்வளைகுடா மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் இன்று 30 முதல் 45 கி.மீ சேகத்திலும், அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மே 2ம் தேதி வரை கொந்தளிப்பாக காணப்படும். எனவே மீனவர்கள் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிதீவிர புயலாக மாறியுள்ள ‘போனி’ புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதிதீவிர புயலாக மாறும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையில் கரையை கடக்கக்கூடும். இதனால், மே 3, 4 தேதிகளில் ஒடிசா மற்றும் வடக்கு கடலோர ஆந்திரா மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fishermen ,Bengal ,interview ,Balachandran ,areas , Fani Storm, Chennai Weather Center, Balachandran, Rain, Fishermen
× RELATED வங்கக்கடலுக்கு இன்றும் நாளையும்...