×

பொள்ளாச்சி விவகாரம் : பெண் அதிகாரி தலைமையில் விசாரிக்க கோரிய வழக்கில் சிபிஐ, அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை : பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு விசாரணை பெண் அதிகாரி தலைமையில் நடத்த கோரிய வழக்கில் தமிழக அரசு, சிபிசிஐடி, சிபிஐக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மணிவண்ணன் என்பவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. குற்றாவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான 5 பேரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரையும் கணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்னன் ஆகியோரின் நீதிமன்ற காவலை வரும் மே 6ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் குற்றப்பிரிவு புலனாய்வு துறையிடமிருந்து நேற்று சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை பெண் அதிகாரி தலைமையில் நடத்த கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் பொள்ளாச்சி வழக்கில் உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் வகையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற விதிகளை காவல் துறையினர் பின்பற்றவில்லை என்றும், புதிதாக வெளியான 4 வீடியோக்கள் குறித்து தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்துவது குறித்து தமிழக அரசு, சிபிசிஐடி மற்றும் சிபிஐ பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு ஜூன் 12ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,Pollachi ,SC , Pollachi sexual abuse, CBI, TN government, high court
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!