×

அருப்புக்கோட்டையில் பணி நிறைவடையாமல் பயன்பாட்டுக்கு வராத பொழுதுபோக்கு பூங்காக்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பணி நிறைவடையாமல், பொழுதுபோக்கு பூங்காக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டையில் அஜீஸ்நகர், வசந்தம் நகர், ரயில்வே பீடர் ரோடு ஆகிய இடங்களில் தலா ரூ.20 லட்சத்தில் பொழுதுபூங்காக்கள் அமைக்கப்பட்டன. இதேபோல, திருச்சுழி ரோடு கணேஷ் நகரிலும், சொக்கலிங்கபுரம் நேதாஜி ரோட்டிலும், பூங்கா அபிவிருத்தி திட்டம் மூலம் தலா 20 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி நிறைவடையாமல் உள்ளது. இதற்கு நிதி போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. கணேஷ் நகர் பூங்கா: திருச்சுழி ரோடு கணேஷ் நகர் பூங்கா வழியாக உயர்மின்னழுத்த டவர் செல்வதால், பூங்காவிற்கு மின்வாரியம் மின்இணைப்பு வழங்கவில்லை. இதனால், போர்வெல் அமைத்து தண்ணீர் எடுக்க முடியவில்லை. தண்ணீர் இல்லாமல் பூச்செடிகள் கருகுகின்றன. சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்படவில்லை. அவர்களுக்கு தேவையான விளையாட்டு பொம்மைகளும் அமைக்கப்படவில்லை. காம்பவுண்ட் சுவர் மட்டும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படவில்லை. அழகிய பூச்செடிகள் வைக்கப்படவில்லை.

சொக்கலிங்கபுரம் பூங்கா: சொக்கலிங்கபுரம் நேதாஜி ரோட்டில் உள்ள பூங்காவில் பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளன. பேவர் பிளாக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறுவர்கள் விளையாட உபகரணங்கள் இல்லை. கடும் வெயிலால் பூச்செடிகள் கருகுகின்றன. பூங்கா பணி மேற்கொண்ட ஒப்பந்தகாரருக்கு நகராட்சியில் இருந்து பணம் வழங்காததால், அவர் பூங்காவை நகராட்சி வசம் ஒப்படைக்கவில்லை. இதனால், குடிமகன்கள் மது அருந்தும் ‘பார்’ ஆக மாறி வருகிறது. பூங்காவில் உள்ள செடிகளுக்கு மருந்து தெளிக்காததால், செடிகள் கருகி வருவதாக பராமரிக்கும் ஊழியர் புகார் தெரிவிக்கிறார். இது குறித்து நகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நகரில் அஜீஸ்நகர் பூங்காவை தவிர மற்ற பூங்க்காக்களை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதனால், நகராட்சி பணம் வீணாகிறது. எனவே, பல லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சொக்கலிங்கபுரம் நேதாஜி ரோடு பூங்காவையும், திருச்சுழி ரோடு கணேஷ் நகர் பூங்காவையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகரில் உள்ள 5 பூங்காக்களுக்கும் நகராட்சி பணியாளர்களை பணியில் அமர்த்தி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parks ,Aruppukkottai , Aruppukkottai, recreation, parks
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...