×

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்திற்கான தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை : பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான 4 கல்லூரிகளின் முதல்வர்களை நீக்கம் செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளை தமிழகத்தில் சென்னை உள்பட 6 இடங்களில் கல்லூரிகள் நடத்தி வருகிறது. இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கல்லூரி பேராசிரியர்கள் 7 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கல்லூரி முதல்வர் தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படவில்லை எனக்கூறி முதல்வர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி முதல்வரை மீண்டும் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ளும்படி நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் மனுதாரர்கள் கூறியுள்ள முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக சென்னை கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டிருந்த சேட்டு என்பவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டதாகவும், தாம் தொடர்ந்து முதல்வராக பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court ,Chief Minister ,Pachaiyappa College , Pachaiyappa's College,Appointment of Principal, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...