×

கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஐ.எஸ். தலைவன் பாக்தாதி...5 ஆண்டுகளுக்கு பிறகு வீடியோவில் தோன்றியுள்ளதால் பரபரப்பு!

பாக்தாத்: கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி, 5 ஆண்டுகளுக்கு பிறகு வீடியோவில் தோன்றியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியை இணைத்து இஸ்லாமிய தேசம் அமைக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த ஐஎஸ் அமைப்பு தொடக்கத்தில் வெற்றி பெற்றது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் அந்த அமைப்பில் பலர் இணைந்தனர். எனினும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தங்கள் வசம் இருந்த அனைத்துப் பகுதிகளையும் ஐஎஸ் பயங்கரவாதிகள் இழந்தனர். எனினும், இப்போது தலைமறைவாக இருந்தபடி அவ்வப்போது வெடிகுண்டு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களை அந்த அமைப்பினர் நிகழ்த்தி வருகின்றனர்.

அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அந்த அமைப்பின் தலைவனான அல்-பாக்தாதி எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. பதுங்கி வாழ்ந்த பாக்தாதி அமெரிக்கா மற்றும் பன்னாட்டு விமானப்படைகள் நடத்திய விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக பலமுறை பல்வேறு காலக்கட்டங்களில் செய்திகள் வெளியாகின. கடைசி முறையாக கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் மோசூல் நகரில் உள்ள மசூதியில் மக்களின் பார்வைக்கு காட்சியளித்த பாக்தாதி அதன் பின்னர் பொதுவெளியில் தென்படாததால் அவன் இறந்து விட்டதாகவே பரவலாக கருதப்பட்டது. இந்நிலையில் 5 வருடங்களுக்குப் பிறகு, கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட அல்-பாக்தாதி, தோன்றி பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவருடன் 3 பேர் உள்ளனர். அவர்களின் முகம் மங்கலாக்கப்பட்டுள்ளது. 18 நிமிடம் ஓடும் இந்த விடியோவை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், எதற்காக இலங்கை குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிரியாவில் தங்கள் வசம் இருந்த பகவுஸ் நகரில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோல்வி அடைந்ததையும் சுட்டிக்கட்டி பேசுகிறார். தங்கள் அமைப்பினர் எங்கு கொல்லப்பட்டாலும், அதற்கு பழி தீர்ப்போம் என்றும், தங்கள் அமைப்பில் இருந்து தொடர்ந்து வீரர்கள் தோன்றுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளதாக ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த காணொளி எடுக்கபட்ட காலம் தெரியாவிடினும் அவர் இலங்கைத் தாக்குதல்கள் குறித்து பேசியிருப்பதால் இது அண்மையில் வெளியிட்ப்பட்ட காணொளி என நம்பப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Head ,Baghdadi , ISIS organization, al-Baghdadi, video, Sri Lanka blast
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்