×

செங்கல்பட்டு சுங்கசாவடியில் பட்டப்பகலில் துணிகரம் 11.5 கோடி நகை கொள்ளை...சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் போல நடித்து சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் கைவரிசை

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என கூறி சென்னை நோக்கி வந்த காரை மடக்கி, 11.5 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் மற்றும் ரூ. 7.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து விட்டு தப்பியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.சென்னை அண்ணாசாலையில் அமித்திஸ்ட் என்ற நகைக்கடை சார்பில், மதுரையில் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தங்க, வைர நகை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு,  நகைக்கடையில் இருந்து கோடிக்கணக்கு மதிப்பிலான பாரம்பரிய நகைகள் கார் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.கண்காட்சியில், பவளம், வைரம், வைடூரியம், முத்து, மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் உள்ளிட்ட பாரம்பரிய நகைகள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியில் நகைகள் விற்பனையும் நடந்தது. இதையடுத்து நகைக்கடை நிர்வாகம் கண்காட்சியை முடித்துவிட்டு விற்காத நகைகள் ரூ.11.5 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் விற்பனையில் கிடைத்த ₹7.5 லட்சம் பணத்துடன் நேற்றுமுன்தினம் காலை காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.

நகைக்கடை பொது மேலாளரான சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தயாநிதி ஸ்வைன் (50), டிரைவர் உள்ளிட்ட 5 பேர் காரில் வந்தனர். மாலை 5 மணியளவில் செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து வந்த மற்றொரு கார், திடீரென முன்னால் வந்து குறுக்கே நின்றது. இதையடுத்து நகை கொண்டு வரப்பட்ட காரை டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தினார்.குறுக்கே நின்ற காரில் இருந்து இறங்கி வந்தவர்கள், ‘’நாங்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார். உங்கள் மீதும், உங்கள் உரிமையாளர் கிரண்ராவ் மீதும் சிலைகள் கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. பலமுறை விசாரணைக்கு அழைத்தும் நீங்கள் வரவில்லை. இதனால், விசாரணையை நடத்த முடியவில்லை’’ என்று கூறி காரில் சோதனையிட்டனர். பின்னர் காரில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து, தாங்கள் வந்த காரில் வைத்து கொண்டனர். பிறகு, ‘’சென்னையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வாருங்கள், அங்கு பேசி கொள்ளலாம்’’ என்று கூறி விட்டு அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து நகைக்கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காரின் நம்பரை வைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் விசாரித்தபோது, ‘’அப்படி யாரையும் அனுப்பவில்லை’’ என்று தெரியவந்தது. அப்போதுதான், நகை, பணத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றது தெரிந்தது.

இதுகுறித்து டிஎஸ்பி கந்தன் கூறுகையில், ‘’தயாநிதி ஸ்வைன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் மீது ஏற்கனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிலை கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. கிரண்ராவ் மட்டும் வழக்கு விசாரணையில் அவ்வப்போது ஆஜராகியுள்ளார். தயாநிதி ஒருமுறை கூட ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். வழக்கு சம்பந்தமாக முன்ஜாமீன் பெற்றுள்ளார். பலரிடம் சிலைகளை வாங்கியுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் என்றதும், கிரண்ராவ் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, நகை, பணத்தை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், எனது தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், அந்தோணி ஸ்டாலின் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க உள்ளோம்’’ என்றார்.போலீசார் வழக்கு பதிந்து, மதுரையில் இருந்து காரில் எடுத்து வரப்பட்ட நகை, பணம் குறித்த விவரம் எப்படி இந்த கும்பலுக்கு தெரிந்தது. அதனால், கொள்ளையடித்த நபர்களுக்கும், நகைக்கடை ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewelry robbery ,jewelry workers ,Chennai , 11.5 crore ,jewelry ,robbery,jewelry workers
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...