×

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிஐ ரகசிய விசாரணை

பொள்ளாச்சி: பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டிற்கு சென்று சிபிஐ அதிகாரிகள் நேற்று ரகசிய விசாரணை நடத்தினர். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பணம் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்சியர் திருநாவுக்கரசு(26) மற்றும் இவரது நண்பர்களான ஜோதிநகரை சேர்ந்த சபரிராஜன்(25), சூளேஸ்வரன்பட்டி பூங்காநகரை சேர்ந்த  சதீஸ்(29), பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (24), ஆச்சிப்பட்டியை சேர்ந்த மணிவண்ணன்(28) ஆகிய 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கை, சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்தீபன் தலைமையிலான  அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக  சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை டெல்லியிலிருந்து, சிபிஐ ஐஜி விப்லஸ்குமார் சவுத்ரி, எஸ்.பி.கலைசெல்வி உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் கோவை வந்தனர். பின்னர்  அவர்களிடம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு  சம்பந்தமான ஆவணங்களை  முறைப்படி சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, தனி காரில் ரகசியமாக பொள்ளாச்சி சென்ற சிபிஐ அதிகாரிகள் பாலியல் வழக்கு தொடர்பான தங்களது விசாரணையை துவங்கினர். இதில் முதற்கட்டமாக, பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளிகள் இருப்பிடம் மற்றும் பாலியல் குற்றம் நடந்த பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.  இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டிற்கு நேற்று சென்று ரகசிய விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் கடந்த 7 ஆண்டுகளாக நடந்துவருவதால், இதுதொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட  உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, பாலியல் குற்ற சம்பவம் நடந்த சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும், திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியேரின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக, இன்னும் சில நாட்களுக்கு சிபிஐ  அதிகாரிகள், பொள்ளாச்சி பகுதியில் தங்கி ரகசிய விசாரணை மேற்கொள்ள உள்ளனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் மேலும் யாராவது  உள்ளார்களா என்பது விரைவில் தெரியவரும் என்று கூறப்படுறது.

‘அது நான் அல்ல’
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் தொடர்புடைய நபர்களுக்கு ஆதரவாக, புகார் ெகாடுத்த இளம்பெண்ணின் உறவினர்களை தாக்கிய வழக்கில், அதிமுக பிரமுகர் பார் நாகராஜ் (28) என்பவர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டது. இவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ேநற்று கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த பார் நாகராஜ், போலீஸ் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் நான் செல்போனில் ஒரு பெண்ணை மிரட்டுவது போல் தவறாக சித்தரிக்கப்பட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  அதன் உண்மை தன்மையை கண்டறியவேண்டும். நான் யாரையும் செல்போனில் அழைத்து மிரட்டவில்லை. செல்போனில் என் போல் பேசிய நபர் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். பொள்ளாச்சி பாலியல்  வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும்நேரத்தில் சிலர் வேண்டும் என என் மீது பழி சுமத்த இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தை விசாரித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் பிரமுகர்களிடம் விசாரிக்க திட்டம்
பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் தொடர்பாக 10 பெண்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அந்த ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. சி.பி.ஐ  குழுவினர் பொள்ளாச்சியில் முகாமிட்டு பாலியல்  விவகாரம், வீடியோ பதிவு, அரசியல் கட்சியினர் தொடர்பு குறித்து விசாரித்து வருகின்றனர். சி.பி.ஐ தரப்பில் இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைதான 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை சி.பி.ஐ கோர்ட்டுக்கு அனுப்பியுள்ளனர். சி.பி.ஐ அதிகாரிகள் பலாத்கார வழக்கில் தொடர்புடையதாக  சந்தேகிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களை விரைவில் விசாரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்களை சி.பி.ஐ அதிகாரிகள் மீண்டும்  விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

பாலியல் பலாத்கார விவகாரத்தில் அரசியல் கட்சி தொடர்புடைய நபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களை வழக்கில் இருந்து தப்ப வைத்தது, புகார் தந்த பெண்ணின் பெயரை வெளியிட்டது,  குற்றவாளிகளை முழுமையாக கைது செய்யாமல் அலட்சியம் காட்டியது போன்ற புகார்களால் கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன், டி.எஸ்.பி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணியிடம்  மாற்றப்பட்டனர். பாலியல் விவகார வழக்கில் அலட்சியம் காட்டிய போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தும் என தெரிகிறது. இதுவரை புகார் தராத பெண்கள் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் தர முன் வருவார்கள்  என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,rape victims ,women , Pollachi, rape case,,women, CBI's
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!