×

திருடர்கள் அனைவரது பெயரும் மோடி என பேசிய விவகாரம்: ராகுல்காந்தி நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் உத்தரவு

பாட்னா: திருடர்கள் அனைவரது பெயரும் மோடி என இருப்பதாக பேசிய விவகாரத்தில், ராகுல்காந்தி மே 20-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்  அளிக்குமாறு பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 17 ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.3 கட்ட தேர்தல்  நிறைவடைந்த நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடியும், காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி  தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியும் தேனி, சேலம், மதுரை போன்ற இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

இதனை தொடர்ந்து கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் 100  சதவிகிதம் திருடர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மோடி ரூ.30 ஆயிரம் கோடியை அவரது நண்பரான அம்பானிக்குக் கொடுத்துள்ளார். நீங்கள்   100 சதவிகிதம் மக்களின் பணத்தைத் திருடிவிட்டீர்கள் என்பது உண்மையே என்று குறிப்பிட்டார். நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்  என்று பேசிய ராகுல், ஏன் அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்று முடிகிறது. அது நீரவ் மோடியாகட்டும், லலித் மோடியாகட்டும்,  நரேந்திர மோடியாகட்டும். இன்னும் எத்தனை மோடி வெளியே வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை என கடுமையாகப் பேசினார்.

நீரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி, நரேந்திர மோடி ஆகிய அனைவரும் ஒரே கூட்டத்தைச்  சேர்ந்தவர்கள் என்று பேசிய ராகுல் பிரதமர் தனது பிரச்சாரத்தின் போது வேலையின்மை, விவசாயிகள் மற்றும் ஊழல் குறித்து ஏன் பேசுவதில்லை  என்றும் கேள்வி எழுப்பினார். இதை சுட்டிக்காட்டி, பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி, ராகுல்காந்தி மீது பாட்னா நீதிமன்றத்தில் அவதூறு  வழக்கு தொடர்ந்தார். வழக்கு குறித்து ராகுல்காந்தி மே 20-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,Patna ,Rahul ,Modi , Thieves, Modi, Rahul Gandhi, Patna court
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!