×

பார்சிலோனா ஓபன்: டொமினிக் தீம் சாம்பியன்

பார்சிலோனா:  பார்சிலோனா ஓபன் டென்னிசில் ஆஸ்திரிய வீரர் டொமினிக், சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். நேற்று பார்சிலோனாவில் நடந்த பைனலில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவை 6-4, 6-0 என நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி, ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பார்சிலோனாவில் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் இத்தொடரில் டொமிக் தீம் ஒரு செட்டை கூட இழக்காமல் பைனலுக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. செமி பைனலில் 11 முறை பார்சிலோனாவில் பட்டம் வென்ற ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடாலையும் 6-4, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தி பைனலுக்குள் டொமினிக் தீம் நுழைந்தார்.

நேற்று நடந்த போட்டியில் முதல் செட்டில் சற்று போராடிய மெட்வடேவ், 2ம் செட்டில் முழுவதுமாக சரணடைந்து விட்டார். தீமின் ஃபோர் ஹாண்ட் ரிட்டர்ன்களை எடுக்க முடியாமல், தொடர்ந்து சர்வீஸ்களை மெட்வடேவ் பறி கொடுத்தார். பார்சிலோனா டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை இதற்கு முன்னர் ஆஸ்திரியாவை சேர்ந்த தாமஸ் மஸ்டர் 2 முறை (1995, 1996) வென்றுள்ளார். அதன் பின்னர் ஆஸ்திரிய வீரர் ஒருவர் இப்பட்டத்தை இப்போதுதான் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டொமினிக் தீம் கூறுகையில், ‘‘இதுபோன்ற ஒரு வெற்றி, நமக்கு எப்போதுமே நம்பிக்கையை அளிக்கக் கூடியது.

அடுத்து மாட்ரிட்டில் நடைபெற உள்ள மாட்ரிட் ஓபன் போட்டிகளுக்கு இதே நம்பிக்கையுடன் செல்கிறேன். ஏற்கனவே 2 முறை மாட்ரிட்டில் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளேன். ஆனால் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து விட்டேன். இந்த முறை சற்று போராடிப் பார்க்கலாம்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Barcelona Open ,Dominic Theme Champion , Barcelona Open, Dominic Theme, Champion
× RELATED யுஎஸ் ஓபன் டென்னிஸ் டொமினிக் தீம்...