×

அவெஞ்சர்ஸ் ஹீரோவா நான்? ரசிகர்களின் அழைப்பால் ரஸல் மகிழ்ச்சி

கொல்கத்தா:  ‘‘அவெஞ்சர்ஸ் ஹீரோ என ரசிகர்கள் என்னை அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை குவித்தது. ஓபனர்களில் கிறிஸ் லின் 29 பந்துகளில் 54 ரன்களும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மான் கில் 45 பந்துகளில் 76 ரன்களும் (6 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்தனர். 3 வீரராக முன்னேறி வந்த ஆண்ட்ரே ரஸல், வழக்கம் போல் வாண வேடிக்கை காட்டினார். அவர் ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 80 ரன்களை (6 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசினார்.
 
233 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய பெங்களூரு அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். முதல் 8.2 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து, 58 ரன்களுக்கு மும்பை தடுமாறியது. ஆனால் லோயர் மிடில் ஆர்டரில் இறங்கிய ஹர்திக் பாண்டியா, ருத்ர தாண்டவமே ஆடினார். 34 பந்துகளில் 91 ரன்களை (6 பவுண்டரி, 9 சிக்சர்) குவித்து, அணிக்கு, கவுரமான தோல்வியை பெற்றுத் தந்தார். இப்போட்டியில் ஆல் ரவுண்டராக ஜொலித்து வெற்றிக்கு காரணமான கொல்கத்தா வீரர் ஆண்ட்ரே ரஸல் ஆட்ட நாயகனாக தேர்வானார். ரஸல் கூறுகையில், ‘‘அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை சிறிது நேரம் பார்த்தேன். அந்த படத்தில் வரும் கதாநாயகனின் ரசிகன் நான். அந்த படத்தின் கதாநாயகனாக என்னை ரசிர்கள் வர்ணிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உடம்பை தகுதியுடன் வைத்து, சிறப்பாக பேட்டிங் செய்வது முக்கியமானது. 232 ரன்கள் என்ற இலக்கு எங்களுக்கு போதுமானதாக இருந்தது.

அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெறுவோம்’’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘‘மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடினார். ரஸல் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவரது வளர்ச்சி, மனப்பக்குவம் மகிழ்ச்சி தருகிறது. ரசிகர்களும் எங்களுக்கு சிறப்பான ஆதரவு தந்தனர்’’ என்று ெதரிவித்தார்.மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா கூறுகையில், ‘‘எதிரணியினரின் ரன் ரேட்டை நினைத்து பார்க்காமல் துணிந்து விளையாட வேண்டும். இந்த போட்டியை மிகவும் ரசித்து விளையாடினேன். குருணால் சற்று கை கொடுத்திருந்தால், வெற்றி பெற்றிருப்போம்’’ என்று தெரிவித்தார்.

டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி முன்னதாக டெல்லியில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் (50 ரன்கள்), கேப்டன் ஸ்ரோயாஸ் ஐயர் (52 ரன்கள்) ஆகியோர் அரை சதம் அடித்தனர். 188 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி, 6 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Avengers ,Russell ,fans , Avengers heroo , Russell
× RELATED காரைக்குடி மகர்நோன்பு திடலில்...