×

கூ.நல்லூர் தண்ணீர்குன்னத்தில் பாழடைந்து பயமுறுத்தும் 100 ஆண்டு பழமையான சமாதி கட்டிடங்கள்

* பராமரித்து பாதுகாக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கூத்தாநல்லூர் : கூத்தாநல்லூர் அருகே தண்ணீர்குன்னத்தில் 100 ஆண்டுகளை கடந்து இருக்கும் இரண்டு சமாதிகள் பாழடைந்து காண்போரை பயமுறுத்தி கொண்டிருக்கிறது. மர்மங்களை உள்ளடக்கிய அந்த சமாதிகளை பராமரித்து பாதுகாக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த அழகிய கிராமம் தண்ணீர்குன்னம். பல வரலாற்று பெருமைகளை உள்ளடக்கிய இந்த கிராமம் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இந்த கிராமத்தில்தான் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மங்கள் நிறைந்த இரண்டு பெரிய சமாதிகள் பாழடைந்து காண்போரை பயமுறுத்தி கொண்டிருக்கிறது.

உடையார் சமாதி எங்கே இருக்கிறது என்றால் ஒருவித அச்சத்துடன் அந்த சமாதிகளை அடையாளம் காட்டுகிறார்கள் மக்கள். கூத்தாநல்லூர் திருநாகேஸ்வரம் பிரதான சாலையின் ஓரத்தில் இருக்கும் அந்த பாழடைந்த சமாதிகளைப்பற்றி பல விஷயங்களை சொல்கிறார்கள். பங்களா உடையார் என்று சொல்லப்படும் குறுநில மன்னராக இருந்த ஒரு செல்வந்தர் தன்னுடைய பேரன் 22 வயதில் அகால மரணமடைய, அபூர்வ சக்திகளைக்கொண்ட தன் பேரனை அடக்கம் செய்த தண்ணீர்குன்னத்தில் பிரமாண்ட சமாதியை கட்டி அதற்கு சகல பூஜைகளையும் செய்து வந்ததாக கூறுகிறார்கள்.

அதன் அருகிலேயே பங்களா உடையாரின் வம்சாவழியின் நான்கு முக்கிய பிரமுகர்களின் சமாதியும் கட்டப்பட்டு அதற்கும் பூஜை புனஸ்காரங்கள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த பூஜைகளுக்காக 10 வேலி நிலங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தை சாகுபடி செய்து அதில் வரும் வருமானத்தில் சமாதிகளின் பூஜைகளை நடத்த வேண்டும் என எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் நிலத்தின் வரும் வருமானம் சரிவர சமாதிகளின் பராமரிப்புக்கு தரப்படாததால் சமாதிகளின் பராமரிப்பு மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்திருக்கிறது.

இந்த சமாதியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நபர்களின் உறவினர்கள் தொடர்ந்து இந்த சமாதிக்கு வந்து வழிபட்ட நிலையில்  காலப்போக்கில் அவர்கள் வருகையும் குறைந்துபோய் பல ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலும் நின்று போனது. அதனால் சமாதியின் பராமரிப்பும் நின்றுபோய் இன்று பாழடைந்து  மரங்கள் வளர்ந்து விஷ ஜந்துக்கள் நிறைந்து காண்போரை பயமுறுத்தி கொண்டிருக்கிறது.

இந்த பிரமாண்ட சமாதிகள் ஏன் இவ்வளவு கவனமுடன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு கடைசி வரை யாரிடமும் விடை கிடைக்கவில்லை . மக்கள் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில் இருக்கும் இந்த பாழடைந்த சமாதிகளை சுத்தப்படுத்தி நினைவிடமாக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும். தவறும் பட்சத்தில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து பாழடைந்து காண்போரை பயமுறுத்தி, விஷ ஜந்துக்களின் புகலிடமாக இருக்கும்  இந்த சமாதிகளை தூய்மைப்படுத்த முன்வர வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : buildings ,Samadhi ,Nallur , Samadhi, 100 years old,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியான கர்ப்பிணி உடல் தகனம்