×

இடைத்தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றம் தொகுதியில் 17,239 வாக்குகள் எகிறியது எப்படி? எதிர்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கேள்வி

மதுரை : திருப்பரங்குன்றம் தொகுதியில் 4 மாத இடைவெளியில் அதிரடியாக  17,239 வாக்குகள் அதிகரிக்க மதுரை மாஜி கலெக்டர் நடராஜன் அனுசரணை காட்டினாரா என்ற கேள்வி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும், கலெக்டராகவும் இருந்த நடராஜனை வாக்கு எண்ணும் மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் மாற்றம் செய்து, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் மதுரைக்கு கலெக்டராக ஆவதற்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றரை ஆண்டுகள் கலெக்டராக இருந்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கியதும், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றியோரை தேர்தல் ஆணையம் பட்டியல் தயாரித்து மாறுதல் செய்வதற்கு முந்தியே தமிழக அரசு நடராஜனை ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு கலெக்டராக மாற்றம் செய்து கொண்டது. அதன்படி 2018 ஆகஸ்ட் 24 முதல் மதுரை கலெக்டராக பணியாற்றி வந்தார். இவர் மீது வாக்கு எண்ணும் மைய புகார் மட்டுமின்றி பரபரப்பூட்டும் புது புகாரும் எழுந்துள்ளது.

மே 19ல் நடைபெற இருக்கும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி  இடைத்தேர்தலை தமிழகமே எதிர்நோக்கி உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர் பட்டியலில் 4 மாத இடைவெளியில் 17,239 வாக்குகள் அபரிமிதமாக அதிகரித்துள்ளது. இதற்கு அந்த காலகட்டத்தில் மாவட்ட கலெக்டராக இருந்த நடராஜன் அனுசரணை காட்டினாரா என்ற கேள்வி எதிர்கட்சியினர் மத்தியில் பூதாகரமாக எழுந்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:  திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2019 ஜனவரி 31ல் வெளியான வாக்காளர் இறுதி பட்டியல்: மொத்தம்: 3,01,557 ஆண்-   1,49,421 பெண்- 1,52,111 திருநங்கை- 25 இந்தப் பட்டியலில், வாக்காளர் எண்ணிக்கை திடீரென்று 3 லட்சத்தை தாண்டி எகிறியுள்ளது. இது தான் தற்போதைய இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலாகும்.

இங்கு 2016 பொது தேர்தல் முதல் வாக்காளர் பட்டியலில் நிலவும் குழப்பம் வருமாறு:

* 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 2,79,096. அதில் ஜெயித்த சீனிவேல் மறைந்ததால் 6 மாதத்தில் அதாவது 2016 நவம்பரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 2,85,980 ஆக அதிகரித்துள்ளது.
* அடுத்து 2 ஆண்டுக்கு பிறகு உயர வேண்டிய எண்ணிக்கை குறைந்துள்ளது.  2018 செப்டம்பரில் வெளியான வாக்காளர் பட்டியலில் 2,84,318 ஆக குறைந்தது. அதாவது 1,662 வாக்காளர் போலி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தனர். இந்த வாக்காளர் பட்டியலின்படி 2018 நவம்பரில் எதிர்பார்க்கப்பட்ட இடைத் தேர்தல் நடைபெறவில்லை.
* இதன் பிறகு கடந்த ஜனவரி 1ம் தேதி புதிய வாக்காளராக சேர்த்தல், முகவரி மாற்றங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்படி  மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 67,000 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன. இதில் அதிகபட்சமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் 19 ஆயிரம் மனுக்கள் குவிந்தன.
* இதன்படி புது வாக்காளர் சேர்க்கப்பட்டு வெளியான இறுதி பட்டியலில் மாவட்டம் முழுவதும் 49,705 பேர் அதிகரித்தனர். இதில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் 17 ஆயிரத்து 239 பேர் அதிகரித்துள்ளது அதிர்ச்சிக்குரியது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கூறும்போது, ‘‘வாக்காளர் பட்டியலில் 4 மாத இடைவெளியில் அதிகளவாக எண்ணிக்கை ஏறி இருப்பதை பார்க்கும்போது இடைத் தேர்தலுக்காக வெளி தொகுதி ஆட்கள் நுழைக்கப்பட்டுள்ளனரா என்பது கண்டறியப்பட வேண்டும், இந்த தில்லுமுல்லுக்கு அப்போதைய மாவட்ட கலெக்டர் அனுசரணை காட்டினாரா அல்லது கண்டு கொள்ளவில்லையா என்கிற சந்தேகமும் எழுகிறது. போலி வாக்காளர் இருந்தால் அவர்கள் வாக்களிக்க முடியாத நிலையை உருவாக்குவதே சரியான நடவடிக்கையாக இருக்கும்” என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,constituency ,Thiruparankundam ,activists ,opposition , District Election Officer, Votes, Majestic Collector Natarajan, Opposition, Social Activists
× RELATED மக்களவைத் தேர்தல் காலை 8 மணிக்கு...