×

இந்தோனேசியாவில் பனிசுமை காரணமாக 274 தேர்தல் ஊழியர்கள் உயிரிழப்பு : 1,878 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஜகார்தா : இந்தியாவில் பழையபடி வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என சில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தோனேஷியாவில் வாக்குச் சீட்டு எண்ணும் பணியில் ஈடுபட்ட 274 ஊழியர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய தேர்தல்

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் கடந்த ஏப்ரல் 17ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுடன் நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணம், உள்ளாட்சி என மொத்தம் 5 தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதாவது ஒரு வாக்காளர் 5 வாக்குகளை பதிவு செய்தார். செலவுகளை குறைக்கும் வகையில் ஒரே கட்டமாக நாடு முழுவதும் 5 தேர்தல்களுக்கும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இது இந்தோனேஷியா வரலாற்றில் இது போன்ற தேர்தல் நடத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

தேர்தல் பணியில் 60 லட்சம் ஊழியர்கள்

சுமார் 19 கோடி பேர் வாக்குரிமை பெற்று இருந்த நிலையில், நாடு முழுவதும் 8 லட்சத்து 10 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒட்டு மொத்தமாக 2 லட்சத்து 45,000 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், தேர்தல் பணி இந்தோனேசிய அரசுக்கு கடும் சவாலாக இருந்தது. சுமார் 60 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 17 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்கு அளித்தனர். இந்தோனேஷியாவை பொறுத்தவரை இன்னும் வாக்குச் சீட்டு முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட 274 ஊழியர்கள் பலி

கடந்த 17ம் தேதி திருவிழா போல் தேர்தல் நடந்து முடிந்தாலும் கைகளால் வாக்கு எண்ணும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தான் அதிர்ச்சி தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட 274 ஊழியர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். தேர்தல் முடிவுகளை மே 22ம் தேதி அறிவிக்க வேண்டும் என்பதால் வாக்குச் சீட்டு எண்ணும் பணியில் பல்வேறு ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

1878 ஊழியர்கள் கடும் பனிச்சுமையால் உடல்நலக்குறைவு

இந்நிலையில் கூடுதல் பனிச்சுமை, ஓய்வின்மையால் 274 ஊழியர்களை பலி வாங்கி இருப்பதுடன், வாக்குச் சீட்டு எண்ணும் பணியால் மேலும் 1878 ஊழியர்கள் கடும் பனிச்சுமையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செலவை குறைக்க இந்தோனேஷிய அரசு செயல்படுத்திய இந்த திட்டம் சோகத்தில் முடிந்துள்ளது. உயிரிழந்த ஊழியர்களின் விவரங்களை சேகரித்து வரும் அரசு அவர்களது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பணியில் ஈடுபடும் முன் அவர்களுக்கு உடல்தகுதி பரிசோதனை செய்யப்படாததே இது போன்ற உயிரிழப்புக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : polling deaths ,Indonesia , Indonesia, ballot, staff, illness, hospital, sanction, election, relief aid
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்