×

குன்றத்தூர் 5வது வார்டில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை: பொருட்கள் வாங்க பொதுமக்கள் நீண்டதூரம் அலையும் அவலம்

பல்லாவரம்: குன்றத்தூரில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.குன்றத்தூர் பேரூராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட ஜெகன்நாதபுரம், ராஜராஜேஸ்வரி நகர், தேவிநகர், மாணிக்கம் நகர் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ரேஷன் கடை இல்லாததால்,  கார்டுதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நத்தம் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், வயதானவர்கள், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு, இந்த பகுதியில் புதிய நியாய  விலைக்கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்த கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் வயோதிகர்கள் மாதம்தோறும் ரேஷன் பொருட்களை  வாங்குவதற்கு நீண்ட தூரம் அலைய வேண்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மக்களின் வரிப்பணத்தில் கட்டிய இந்த புதிய  நியாய விலைக் கடை 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது.  இதனை, பழைய பொருட்களை தேக்கி வைக்கும் குடோனாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்தும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, இந்த  நியாய விலைக்கடை கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : office ,ration shop ,Kundirathur , Kundirathur, Ration shop , wanderer
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...