×

சென்னையில் புதிதாக இயக்கப்படும் அரசு பஸ்களில் நடத்துனருக்கு தனி இருக்கை இல்லை பயணிகளுக்கு சீட் பெல்ட் கிடையாது: ஆர்டிஐயில் கேட்டவருக்கு எம்டிசி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் புதிதாக இயக்கப்படும் அரசு பஸ்களில் நடத்துனருக்கு தனி இருக்கை இல்லை. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சீட் பெல்ட் வசதியும்  இல்லை, என எம்டிசி அதிகாரிகள் தகவல்ெபறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (எம்டிசி) சார்பில் தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பஸ்கள் காலாவதி மற்றும் பழுது காரணமாக ஓரங்கட்டப்பட்டன. இதையடுத்து, எம்டிசி  நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ்கள் வாங்கப்பட்டன.கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த புதிய பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டன.இந்த பஸ்களில் பல்வேறு சேவை குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாநில அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கத்தை  சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல்பெறும் உரிமை சட்டத்தில்  எம்டிசி நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு நிர்வாகம் அளித்த பதிலில், ‘டிஎன்-01 என்1832, 1837, 1857, 1840, 1885, 1929 ஆகிய பஸ்களில் இடதுபுறம் உள்ள இருக்கைகள் 10 மற்றும் கடைசியில் உள்ள 5 இருக்கைகள் என 15 இருக்கைகள் பெண்கள் அமரும்படி  உள்ளது. வலதுபுறம் மற்றும் ஓட்டுனரின் இடதுபுறத்தில் உள்ள இருக்கைகள் பொதுவானது.
மோட்டார் வாகன சட்டம் 1989ன் படி பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 39+25 மற்றும் ஓட்டுனருக்கு 1, நடத்துனருக்கு 1 வீதம் இருக்கை இருக்க வேண்டும். பஸ்களில் முதலுதவி பெட்டி, மருந்து உள்ளதா என்பது  குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், இந்த பஸ்களில் நடத்துனருக்கு தனி இருக்கை இல்லை.

பஸ்சில் ஏறும் வழியில் இடதுபுறம் உள்ள கடைசி இருக்கையில் பெண் பயணிகளுக்கு அருகே ஒரு இருக்கை நடத்துனருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ்களில் 39 இருக்கைகள் மற்றும் 25 பயணிகள் நின்று செல்லும் படி வட்டார  போக்குவரத்து அலுவலர்களால் அனுமதிக்கப்பட்டதன் படியே உள்ளது.சம்மந்தப்பட்ட புதிய பஸ்களில் மின்னணு பயணச்சீட்டு கருவியின் மூலம் டிக்ெகட் வழங்கப்படுகிறது. இல்லாத பட்சத்தில் மாநகர போக்குவரத்து கழகத்தால் அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கப்படுகிறது. இப்பேருந்துகள்  வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் இயக்கப்படுவதால், பயணிகளின் வசிதிக்காக சீட் பெல்ட் உடன் கூடிய இருக்கைகள் இல்லை.அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட கூடுதலாக பயணம் செய்வது குறித்து ஆய்வு ஏதும்  செய்யப்படவில்லை’ என கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘‘எம்டிசி சார்பில் புதிதாக அறிமுகம் செய்துள்ள பஸ்கள் அனைத்தும் தனியாருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் நடத்துனருக்கு மட்டும் இருக்கை வசதி  முறையாக இல்லை. எனவே இனிவரும் காலங்களில் பஸ்களில் முன்பு இருந்தது போல் நடத்துனருக்கு தனி இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passengers ,Chennai ,RTI ,MTC , seat,passengers, MTC officials , inquirer, RTI
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!