×

லா லிகா கால்பந்து தொடர் 26வது முறையாக பார்சிலோனா சாம்பியன்: மெஸ்ஸி அசத்தல்

கேம்ப் நோ: லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி 26வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது.ஸ்பெயினில் நடைபெறும் பிரபல கால்பந்து லீக் தொடரான இதில் மொத்தம் 20 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதி வருகின்றன. ஒவ்வொரு அணியும் 38 லீக் ஆட்டங்களில் விளையாடிய பின்னர், புள்ளிப் பட்டியலில்  முதல் இடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும். நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி முன்னிலை வகித்து வந்தது.அந்த அணி தனது 35வது லீக் ஆட்டத்தில் நேற்று லெவான்டே அணியை எதிர்கொண்டது. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலை வகித்தன. பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்  லியோனல் மெஸ்ஸி, 2வது பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கினார். ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் அவர் அபாரமாகக் கோல் அடிக்க, பார்சிலோனா 1-0 என முன்னிலை பெற்றது.

மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால், ஆட்ட நேர முடிவில் பார்சிலோனா அணி 1-0 என வென்றது. அந்த அணி 35 லீக் ஆட்டங்களில் 25 வெற்றி, 8 டிரா, 2 தோல்வியுடன் 83 புள்ளிகள் பெற்று 2018-19 சீசனில் பட்டம்  வெல்வதை உறுதி செய்தது. அத்லெடிகோ மாட்ரிட் (74), ரியல் மாட்ரிட் (65), ஜெடாபி (55) அணிகள் எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் வென்றாலும் பார்சிலோனாவை முந்தும் வாய்ப்பு இல்லை என்பதால், அந்த அணி கோப்பையை  தக்கவைத்துக் கொண்டது. இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் சாம்பியன் பட்டம் வென்றதை பார்சிலோனா அணி வீரர்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். லா லிகா வரலாற்றில் ரியல் மாட்ரிட்  33 முறையும், பார்சிலோனா 26 முறையும் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் பார்சிலோனா 4 முறை பட்டம் வென்றுள்ளது. மெஸ்ஸி 10வது முறையாக பார்சிலோனா அணிக்காக பட்டம் வென்று  சாதனை படைத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : La Liga Football ,Barcelona , La Liga ,Football, Barcelona, Champion, Messi
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...