×

தவான் 50, ஷ்ரேயாஸ் 52 பிளே ஆப் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ்

புதுடெல்லி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்தது. அந்த அணியில் மோரிசுக்கு பதிலாக லாமிகேன் இடம் பெற்றார். ஆர்சிபி அணியில் மொயீன்  அலி, அக்‌ஷ்தீப், சவுத்தீக்கு பதிலாக கிளாசன், துபே, குர்கீரத் சேர்க்கப்பட்டனர். டெல்லி தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, தவான் களமிறங்கினர். ஷா 18 ரன் மட்டுமே எடுத்து வெளியேற, தவான் - கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 68 ரன் சேர்த்தது.தவான் 50 ரன் (37 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் சுந்தர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த அதிரடி வீரர் ரிஷப் பன்ட் 7 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஷ்ரேயாஸ் 52 ரன் (37 பந்து, 2 பவுண்டரி, 3  சிக்சர்) விளாசி சுந்தர் பந்துவீச்சில் கோஹ்லியிடம் பிடிபட்டார். கோலின் இங்ராம் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் ரூதர்போர்டு, அக்சர் பட்டேல் அதிரடியில் இறங்க... டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்  முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது.

ரூதர்போர்டு 28 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), அக்சர் 16 ரன்னுடன் (9 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் சாஹல் 2, உமேஷ், சுந்தர், சாய்னி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. பார்திவ், கேப்டன் கோஹ்லி இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 63 ரன் சேர்த்தது. பார்திவ்  39 ரன் (20 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), கோஹ்லி 23 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
டி வில்லியர்ஸ் 17 ரன், கிளாசன் 3 ரன்னில் ஆட்டமிழக்க, ஓரளவு தாக்குப்பிடித்த துபே 24 ரன் எடுத்து மிஷ்ரா சுழலில் தவான் வசம் பிடிபட்டார். ஆர்சிபி 13 ஓவரில் 111 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், குர்கீரத்  - ஸ்டாய்னிஸ் ஜோடி வெற்றி முனைப்புடன் போராடியது. குர்கீரத் 27 ரன் எடுத்து (19 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி இஷாந்த் வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார்.

ரபாடா வீசிய கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்ட நிலையில், 2வது பந்தில் சுந்தர் (1) ஆட்டமிழந்தார். பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன் மட்டுமே எடுத்து 16 ரன் வித்தியாசத்தில்  தோல்வியைத் தழுவியது.
ஸ்டாய்னிஸ் 32 ரன் (24 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), உமேஷ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் மிஷ்ரா, ரபாடா தலா 2, இஷாந்த், அக்சர், ரூதர்போர்டு தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தவான் ஆட்ட நாயகன்  விருது பெற்றார். டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதுடன், புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhanan 50 ,Playoffs ,Shreyas ,Delhi Capitals , Davan 50, Shreyas 52m Delhi Capitals
× RELATED இஷான், ஷ்ரேயாஸ் விவகாரம்: கங்குலி எதிர்ப்பு