×

‘எங்க... பாக். தீவிரவாதிக்கு சாபம் குடுங்க பார்ப்போம்’: பிரக்யா சிங்குக்கு திக்விஜய் சிங் அழைப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை ‘தீவிரவாதி’ என பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் பேசியிருந்தார்.  இதற்கு பதில் அளித்த திக் விஜய்சிங், ‘காவி அணிந்தால் மட்டும் துறவி ஆகிவிட முடியாது’  என பதிலடி கொடுத்துள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக பாஜ சார்பில் பெண் துறவி பிரக்யா சிங் போட்டியிடுகிறார். ஹேமந்த் கர்கரே மரணம்,  பாபர் மசூதி இடிப்பு என பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி தேசிய அளவில் கண்டனங்களுக்கு உள்ளான பிரக்யா, ஆரம்பம் முதலே பல்வேறு குற்றசாட்டுகளை கூறி திக்விஜயை வம்பிழுத்து வந்தார். இதற்கு   திக்விஜயோ பதில் சொல்லாமல் அமைதி காத்துவந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய பிரக்யா, திக்விஜயை தீவிரவாதி என குறிப்பிட்டார். இந்நிலையில், இதுவரை அமைதிகாத்து வந்த திக்விஜய் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். சீஹோரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில்  பேசிய திக்விஜய், பிரக்யாவை குறிப்பிட்டு, ‘‘தவத்தாலும், தியாகத்தாலும் தான் ஒருவர் துறவியாக முடியும், காவி ஆடை அணிந்தால் மட்டும் துறவியாகிவிட முடியாது. அனைவருக்கும் பணிபுரிவதே தர்மம். எனக்கும்,  கர்கரேவுக்கும் சாபம் கொடுக்கும் நீங்கள், ஏன் மசூத் அசாருக்கும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சாபம் அளிக்கவில்லை’’ என தெரிவித்தார்.திக்விஜய்சிங் மற்றும் பிரக்யா மோதல் இப்போது மத்திய பிரதேச தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கலெக்டர் அந்தர் பல்டி
 திக்விஜயை தீவிரவாதி என்று பேசியது குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிஹோர் மாவட்ட ஆட்சியருக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து சிஹோர் மாவட்ட ஆட்சியர் அனுப்பிய  அறிக்கையில், பிரக்யா தீவிரவாதி என்று யாரையும் குறிப்பிடவில்லை, தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவில்லை என்று கூறியுள்ளார். பிரக்யாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு  திக்விஜய்யை தீவிரவாதி என்று நான்  பேசவில்லை என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pak ,Digvijay Singh ,Pragya Singh , Pak. Digvijay, Singh , Pragya Singh
× RELATED மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு…...