×

விஸ்வரூபம் எடுக்கும் குழந்தைகள் விற்பனை விவகாரம் கொல்லிமலையில் 50 குழந்தைகள் மாயம்: பகீர் தகவல்கள்

ராசிபுரம்:  குழந்தைகள் விற்பனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கொல்லிமலையில் 50 குழந்தைகள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்களிடம் குழந்தைகளை வாங்கி  தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்த, ராசிபுரம் தட்டாங்குட்டை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலிய  உதவியாளர் அமுதவள்ளி(50), ராசிபுரம் நகர கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக  பணியாற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன்(53) ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஈரோட்டை சேர்ந்த புரோக்கர்  பர்வீன், ஹசீனா, நிஷா, அருள்சாமி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அமுதவள்ளி பல ஆண்டுகளாக கொல்லிமலையில் இருந்து குழந்தைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. குழந்தைகளை விற்பனை செய்யும்போது, பத்திரங்களில் அவர்களிடம் எழுதி வாங்கி உள்ளார். அதோடு குழந்தைகளுக்கு போலி பிறப்பு சான்றிதழும் தயாரித்து கொடுத்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு  கூறியதாவது: தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை கொல்லிமலை, பள்ளிபாளையம் ஆகிய ஊர்களில் 14 குழந்தைகள், அமுதவள்ளி மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகள்  தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை தனிப்படை போலீசார் கண்டறிந்து வருகின்றனர். திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, ஈரோடு போன்ற ஊர்களில் அந்த குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள்.

அவர்களில்  இதுவரை 6 குழந்தைகளையும், தற்போது வளர்த்து வரும் பெற்றோரையும் கண்டுபிடித்துள்ளோம். மற்ற குழந்தைகளின்  பெற்றோரும் விரைவில் அடையாளம் காணப்படுவர். கொல்லிமலையில் பெற்றோர்களின் வறுமையை  பயன்படுத்தி, குழந்தைகள் விற்பனை தொழில் நடந்துள்ளது. விற்பனை செய்யப்பட்ட குழந்தைகள் தவறான வழிக்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான  தண்டனை கிடைக்கும். அதற்கேற்ப விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறோம். குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய மேலும் சிலரையும் கைது செய்ய உள்ளோம். இவ்வாறு எஸ்பி அருளரசு கூறினார்.   ராசிபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட 14 குழந்தைகளில், 12 குழந்தைகள் கொல்லிமலையில் இருந்து வாங்கி வரப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்கு வரும்  பெண்களை குறிவைத்தே, இந்த குழந்தை விற்பனை நடந்துள்ளது. இதற்கு மலைக்கிராமங்களில் பணியாற்றும் சுகாதார செவிலியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசின் உதவித்தொகையை, சுகாதார செவிலியர்கள் தான் பெற்றுக் கொடுக்கிறார்கள். ஒரு பெண்  குழந்தை பெற்ற பிறகு, 3 மாதம் தொடர்ச்சியாக அவரை செவிலியர்கள் கண்காணித்து, அந்த குழந்தை எந்த நிலையில் இருக்கிறது என்பதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஆனால், கொல்லிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆவணங்களை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பார்த்தபோது, பிரசவத்திற்கு வந்த பெண்கள் எண்ணிக்கைக்கும், அதற்கு பின்னர் கண்காணிக்கப்பட்ட பெண்கள்  எண்ணிக்கைக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, சுமார் 50 குழந்தைகள், அரசு ஆவணங்களில் இருந்து காணாமல் போயிருப்பது, சுகாதாரத்துறை அதிகாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. அந்த குழந்தைகளை கண்டறியும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கைதான அருள்சாமி உள்ளிட்டோர் நேற்று கொடுத்த  தகவலின் பேரில், ஈரோட்டுக்கு சென்ற தனிப்படையினர், பவானி  பழனிபுரத்தை  சேர்ந்த செல்வி(29), ஈரோடு வ.உ.சி பார்க் பகுதியை சேர்ந்த லீலா(36)  ஆகிய இருவரையும் கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம்,   திருச்சி, கோவை பகுதிகளுக்கு தனிப்படையினர் சென்று விசாரணை நடத்தி  வருகின்றனர்.

சேலத்தை சேர்ந்த குழந்தை இலங்கை தம்பதிக்கு விற்பனை
ராசிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான நல்வினை விஸ்வராஜ், தனக்கு கிடைத்த ஆதாரத்துடன், ராசிபுரம் டிஎஸ்பி விஜயராகவனிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: இலங்கை கொழும்பு பகுதியை  சேர்ந்த குமாரசாமிபிள்ளை தேவராஜா-பரிமளாதேவி என்ற தம்பதியினர்,  2014ம் ஆண்டு திருச்சிக்கு வந்து 20 நாட்கள் தங்கியுள்ளனர். பின்னர், தாராபுரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில், தங்களுக்கு குழந்தை  பிறந்ததாக பிறப்பு சான்றிதழுடன், கோவை விமான நிலையத்திலிருந்து கொழும்பு சென்றுள்ளனர். ஆனால், அந்த பெண் குழந்தை, சேலம் அரசு மருத்துவமனையில் நாழிக்கல்பட்டியை சேர்ந்த வடிவேல்-அமுதா தம்பதிக்கு பிறந்த  குழந்தை எனவும், அதை ராசிபுரம் கும்பல் மூலம், ஈரோடு பகுதியை சேர்ந்த கோமதி-யுவராஜ் தம்பதிக்கு விற்று அவர்களிடம் இருந்து இலங்கை தம்பதி வாங்கியுள்ளனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வக்கீல் மூலம் போலி ஆவணம் தயாரிப்பு
குழந்தைகள் விற்பனை விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சேலத்தை சேர்ந்த வெல்டர் அருள்சாமி அளித்துள்ள வாக்குமூலத்தில், இதுவரை அமுதவள்ளி உள்ளிட்டோருடன் சேர்ந்து கூட்டாக 13 குழந்தைகளை விற்றுள்ளதாகவும்,  கடந்த 20ம் தேதி கூட, கொல்லிமலையில் இருந்து வாங்கிய ஒரு குழந்தையை பெங்களூருவில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை விற்பனைக்காக, வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம்  தயாரித்ததாகவும் அருள்சாமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children , Vishwaroopam , selling, children, Kollamalai
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...