×

வன்னிய சமூகத்தினரை மிரட்டும் வகையில் முத்தரசன் பேசவே இல்லை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம்

சென்னை: வன்னிய சமூகத்தினரை மிரட்டும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசவே இல்லை. அவரது உரை காணொளியில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதை பாமக நிறுவனர் ராமதாஸ் முழுமையாக பொறுமையுடன் கேட்டு தெளிவு பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கடந்த 24ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். அவர் உரையில் எந்த இடத்திலும் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், குறிப்பாக ‘வன்னியர்’ சமூக மக்கள் பகுதியை அச்சுறுத்தும் வகையில் ஒரு வார்த்தையும் பயன்படுத்தவே இல்லை.

இதை அவரது பேச்சின் காணொலியை முழுமையாக பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம். வள்ளுவர் கோட்ட ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் ஆற்றிய உரை யூ டியூப் காணொலியில் அனைவரும் காண, கேட்க வசதியாக கட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க சிலர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வன்னியர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என பேசினார் என்று முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அப்பட்டமான பொய் செய்தியை, வன்முறையை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்து வருகின்றனர். மேலும் சிலர் அவரது அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆத்திரமூட்டியும், ஆபாசமாகவும் பேசி வருகின்றனர்.

இந்த அநாகரிக செயலை குறைந்தபட்ச ஜனநாயக உணர்வுள்ளோர் அனுமதிக்க மாட்டார்கள். பேசாத ஒரு செய்தியை பேசியதாக இட்டுக் கட்டி விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் பரப்புரை செய்வதும், அலைபேசியில் அச்சுறுத்தல் செய்வதும் தீய உள் நோக்கம் கொண்ட மிக மோசமான செயலாகும். இந்த இழிசெயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டித்தும், முத்தரசன் அலைபேசியில் தரம்தாழ்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடந்த 26ம் தேதியில் அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் 27ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன், திடீரென ஜெனரல் டயராக மாறி வன்னியர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கொக்கரித்து இருக்கிறார் என்று குறிப்பிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்துள்ளார். அவருக்கு கிடைத்த ஆரம்ப கட்ட செய்திகொண்டு அறிக்கை தயாரித்திருப்பார் என கருதுகிறோம். அவர் யூ டியூப் சமூக ஊடகத்தில் கிடைக்கும் முத்தரசன் உரையை முழுமையாக பொறுமையுடன் கேட்டு தெளிவு பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mutharasan ,Vanni ,Communist Party of India , Vanniya social, intimidating, muthurasan, talk, no
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...