×

கோவையில் பட்டப்பகலில் புகுந்து நிதிநிறுவன பெண் ஊழியர்களை தாக்கி 812 பவுன் நகைகள் கொள்ளை: கர்சீப்பால் முகத்தை மூடி வந்த மர்மநபர் கைவரிசை

கோவை: கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் புகுந்து பெண் ஊழியர்களை தாக்கி 812 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே முத்தூட் மினி பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் ரேணுகா தேவி(24), திவ்யா(22) ஆகியோர் பணியில் இருந்தனர். ரேணுகா தேவி மற்றொரு அறைக்கு சென்றிருக்க, திவ்யா மட்டும் இருக்கையில் இருந்தார்.

அப்போது, மர்ம நபர் ஒருவர் கர்சீப்பால் முகத்தை மூடியபடி வந்து நகையை அடகு வைக்க வேண்டும் என்று கூறினார். திடீரென அவர் திவ்யாவின் முகத்தில் குத்தியுள்ளார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். மீண்டும் அவரை தாக்கிய அந்த நபர்  எழுந்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து சத்தம் கேட்டு ரேணுகாதேவி அங்கு வந்தார். மர்மநபர் அவரையும் தாக்கினார். 2 பேரையும் மிரட்டி லாக்கர் சாவியை கேட்டார். பயத்தில் அவர்கள் லாக்கர் சாவிகளை கொடுத்தனர்.

பின்னர் மர்ம நபர் லாக்கரை திறந்து 812 பவுன் தங்க நகைகளையும், ரூ. 1 லட்சம் ரொக்கத்தையும் எடுத்து கொண்டார். இவற்றின் மதிப்பு ரூ.1.5 கோடி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து நகை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர் மாடியில் இருந்து சாவகாசமாக இறங்கி ஆட்டோ பிடித்து போத்தனூர் ரயில் நிலையம் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கேரளாவுக்கு ரயிலில் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. 2 பெண் ஊழியர்களும் சிறிது நேரம் கழித்து நடந்த சம்பவத்தை வெளியே இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் நிதி நிறுவன பெண் ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது பதிவாகிஇருந்தது. கைரேகை நிபுணர்களும் கைரேகையை ஆய்வு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் சாராவும் அங்கு கொண்டு வரப்பட்டது.

அது நஞ்சுண்டாபுரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மர்மநபரை கண்டுபிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து துணைகமிஷனர் பெருமாள் கூறியதாவது:- கொள்ளையன் தாக்கியதில் ரேணுகாதேவிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு ஊழியர் திவ்யா செல்வபுரம் கிளையில் பணிபுரிபவர். அவர் நேற்றுமுன்தினம் மாற்று பணிக்காக இங்கு வந்துள்ளார். கொள்ளையன் இந்தி மற்றும் தமிழில் பேசியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையனை பிடிக்க குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜ்குமார் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நிறுவன ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், நகை அடகு வைக்க அடிக்கடி வருபவர்கள் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையன் விரைவில் பிடிபடுவான் என்றார்.

பெண் ஊழியர்களிடம் விசாரணை

பெண் ஊழியர்கள் ரேணுகா தேவி, திவ்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே கோவையில் தனியார் பார்சல் நிறுவன ஊழியரை தாக்கி 8 கிலோ தங்கநகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் அந்த நிறுவனத்தின் பணிபுரிந்த பெண் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். எனவே போலீசார் 2 பெண் ஊழியர்களிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திவருகின்றனர். அந்த கட்டிடத்தில் இருந்த மற்ற கடைக்காரர்களுக்கு தெரியாமல் பட்டப்பகலில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Murder , Coimbatore, graduation, financial institution, female employee, attacking, jewelery robbery
× RELATED மூத்த நடிகர் ஜனகராஜ் நடிப்பில் ‘தாத்தா‘ குறும்படம் !