×

விவிபேட் இயந்திரங்கள் நமிபியாவுக்கு ஏற்றுமதி: பெல் நிர்வாக இயக்குனர் தகவல்

பெங்களூரு: இந்திய மக்களவை தேர்தல் முடிவு பெறும் நிலையில், வாக்கு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை தயாரித்து தென்மேற்கு ஆப்பிரிக்கா நாடான நமிபியாவுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது நமிபியாவுக்கு மின்னனு வாக்கு இயந்திரங்களை பெல் நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. தற்போது, இந்தியாவை போன்று வாக்கு இயந்திரங்களுடன் விவிபேட் இணைக்கும் வசதியை மேம்படுத்தி அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெல் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான கவுதமா கூறியதாவது: 2014ம் ஆண்டு ரூ.69.44 கோடி மதிப்புள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை நமிபியாவுக்கு ஏற்றுமதி செய்தோம். தற்போது அங்கு நடக்கவுள்ள தேர்தலுக்காக விவிபேட் இயந்திரங்களும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நமது நாட்டின் மக்களவை தேர்தல் முடிந்த பிறகு நமிபியாவின் கோரிக்கையின் மீது கவனம் செலுத்தி நவம்பர் மாதத்துக்குள் அனுப்பிவைக்க இருக்கிறோம்.

எந்த நாடு விரும்பினாலும், வாக்கு இயந்திரம், விவிபேட் இயந்திரத்தை ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கிறோம். பல நாடுகளில் வாக்குசீட்டு முறைதான் பயன்படுத்துகிறார்கள். போட்ஸ்வானா நாட்டில் வாக்கு இயந்திரம் பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், அதற்கான சட்டத் திருத்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நமிபியாவுக்கு 2014ம் ஆண்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றுமதி செய்தோம். தற்போது அவர்கள் விவிபேட் இயந்திரங்களை தான் கேட்டுள்ளார்கள்.

நேபாளம் வாக்கு இயந்திரம் மூலம் நடத்தும் தேர்தலை விரும்புகிறது. அவர்கள் நமது நாட்டில் நடக்கும் தேர்தல் விதிமுறைகளை பார்வையிட்டும் சென்றுள்ளனர். தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே வாக்கு இயந்திரங்களை ஏற்றுமதி செய்ய முடியும். மக்களவை தேர்தல் முடியும் வரை எந்த நாட்டு கோரிக்கையும் ஏற்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் உரிய நேரத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியாது என்பதால் நேபாளத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bell ,Namibia , Engines, Namibia, exports, information
× RELATED உலகத்தில் எந்த சக்தியாலும் தமிழர்களை...