×

ஐஜி உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது உண்மையை மறைத்து வழக்கு போலீஸ்காரருக்கு அபராதம்

மதுரை: உண்மையை மறைத்து, மதுரை ஐஜி உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர்ந்த போலீஸ்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரியில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்தவர் கோவிந்தசாமி. இடமாறுதலில் தற்போது ராமநாதபுரத்தில் பணிபுரிகிறார். இவருக்கு பதவி உயர்வு மற்றும் அதற்குரிய பணப்பலன்கள் வழங்க ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. அதை போலீஸ் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. அவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி கோவிந்தசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இது விசாணைக்கு வந்தபோது, மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனாலும் தனக்கு பதவி உயர்வு மற்றும் பலன்கள் வழங்கவில்லை என
மதுரை தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், நெல்லை டிஐஜி கபில்குமார் சி.சரத்கர், போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் (நெல்லை),  ஸ்ரீ நாத் (கன்னியாகுமரி), ஓம்பிரகாஷ் மீனா (ராமநாதபுரம்) ஆகியோருக்கு எதிராக கோவிந்தசாமி நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், மேற்கண்ட 5 அதிகாரிகளும் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். இவ்வழக்கு  நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது, 5 அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அரசுத்தரப்பில், ‘‘மனுதாரருக்கு கிரேடு 1 பதவி உயர்வு மற்றும் உரிய பலன்கள் வழங்கப்பட்டது. இடமாறுதல் ரத்து செய்யப்பட்டது. இதை மறைத்து மனுதாரர், தற்போது மனு செய்துள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ரிட் மேல்முறையீட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அவரது வழக்கறிஞரிடம் கூட மனுதாரர் தெரிவிக்கவில்லை. அவர் உண்மையை மறைத்து தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளார். எனவே மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். அந்த தொகையை மதுரை காந்தி மியூசியத்திற்கு செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : policeman ,IPS officers ,IG , IG, 5 IPS, officers, truth, concealing, prosecution, fine
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு