×

சினிமா தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமனம்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் தலைமையிலான நிர்வாகிகள் நிர்வகித்து வருகிறார்கள் இவர்களின் பதவிக்காலம் வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் தேதியை தீர்மானிக்கவும் வரவு செலவு  கணக்குகளை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் வருகிற மே 1ம் தேதி பொதுக்குழு கூட இருக்கிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது.தமிழக அரசின் வணிகவரித் துறையும்,  பதிவுத் துறையும் இணைந்து சென்னை மத்திய பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தனி அதிகாரியாக நியமித்துள்ளது.  இது திரைப்பட தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

விஷால் தலைமையிலான நிர்வாகத்தை தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவினர் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்க அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துச் சென்றனர். மறுநாள் திறக்கச்  சென்ற தலைவர் விஷால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விஷால் தொடர்ந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தங்களுக்கு புகார்  வந்திருப்பதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் தமிழக அரசு  தனி அதிகாரியை நியமித்திருப்பது தயாரிப்பாளர் சங்கத்தை அரசாங்கம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக திரைப்படத் துறையினர் கருதுகிறார்கள்.அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து விஷால் தரப்பினர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cinematographer ,Special Officer ,Association , Cinematic producer, Appointment, officer
× RELATED வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு