×

சொந்த மாநிலத்தில் வேலை இல்லாதது வருத்தம் கிழிந்து நைந்துபோன ஷூவுடன் ஓடித்தான் பதக்கம் வென்றேன்: கோமதி மாரிமுத்து பேட்டி

சென்னை: சொந்த மாநிலத்தில் எனக்கு வேலையில்லாதது வருத்தமாக உள்ளது. என்னை போன்று வந்தவர்கள் வேலையில்லாமல் வேறு மாநிலத்துக்கு போகாமல் தமிழகத்திலே வேலை கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய  விருப்பம். நான் கிழிந்து நைந்துபோன  ஷூவுடன்தான் ஓடி பதக்கம் வென்றேன் என்று ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து கூறினார். தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தரும் வகையில் தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த கோமதி மாரிமுத்துவை முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னையில் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவை கூடுதல் ஆணையர்  மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள்  நேரில் அழைத்து பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினர். மேலும் அவருக்கு பயிற்சியின் போது பல்வேறு ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கிய மயிலாப்பூர்  போக்குவரத்து எஸ்ஐ பிரான்சிஸ் மேரியையும் கூடுதல் ஆணையர் அழைத்து பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.

பின்னர் கோமதி மாரிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:  ஆசிய தடகள போட்டியில் முதல் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் பள்ளியில் படிக்கும் போது விளையாட்டில் எனக்கு ஆர்வம் இல்லை. என்னுடைய  ஆசிரியர் தான்  உதவி செய்தார்.
அதன்பிறகு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது தான் விளையாட்டில் ஆர்வம் அதிகமானது. அதன்பிறகு ராஜாமணி என்பவரிடம் பயிற்சி பெற்றேன். அவர் தான் என்னை உருவாக்கினார். அவர் அளித்த பயிற்சியினால்  அப்போதே தேசிய விருதுகளை வாங்கினேன். அதன்பின்னர் காந்தி என்பவரிடம் பயிற்சி பெற்றேன். அவரை இழந்தது வருத்தமாக உள்ளது. அதன்பிறகு இரண்டு வருடம் எந்த பயிற்சியும் செய்யவில்லை. அதன்பின்னர் கடுமையாக  பயிற்சி செய்தேன் அப்போது ஜே.எஸ்.பாட்டையா என்பவரிடம் பயிற்சி பெற்றேன். அவர் கடைசி வரை எனக்கு உதவி செய்தார். மேலும் பலர் உதவி செய்ததால் ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றேன்.

மேலும் தமிழக அரசு எனக்கு உதவி செய்வதாக கூறியது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு வேலையில்லாதது வருத்தமாக உள்ளது. என்னை போன்று வந்தவர்கள் தமிழகத்தில் வேலையில்லாமல் வேறு மாநிலத்திற்கு போகாமல்  தமிழகத்திலேயே வேலை கிடைக்க வேண்டும். ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றதால் கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் என்னை நேரில் அழைத்து பாராட்டினர். போலீஸ் கமிஷனர் மற்றும் உயர்அதிகாரிகள் என்னை அழைத்து பாராட்டியதும், அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் படிக்கும் காலங்களில் ஷூ இல்லாமல் வெறுங்கால்களுடன்தான்  ஓடினேன். தற்போதுதான் ஷூ அணிந்து ஓடுகிறேன். அந்த ஷூவும் கிழிந்து நைந்துபோனது. அந்த ஷூவுடன்தான் ஓடி தங்கம் வென்றேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. எனக்கு எந்த தாழ்வு மனப்பான்மையும் வரவில்லை.  ஓடி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் என் மனதில் இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state , Sadness ,native state, tearful, Gomti Marimuthu
× RELATED ரூ.1000 கோடி டெண்டர் தராததால் ஜெகன்மோகனை...