×

அரசுத் துறைகளில் உள்ள 22 லட்சம் காலி பணியிடம் ஒரே ஆண்டில் நிரப்பப்படும்: ராகுல் அறிவிப்பு

ரேபரேலி: ‘‘அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் காலி பணியிடங்கள் அனைத்தும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஒரே ஆண்டில் நிரப்பப்படும்,’’ என ராகுல் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலி மக்களவை தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். இங்குள்ள உன்சகார் பகுதியில் அவரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது: நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கப்பார் சிங் வரி (சரக்கு மற்றும் சேவை வரி) போன்ற முட்டாள்தனமான நடவடிக்கையை யாரும் மேற்கொண்டதில்லை.

ரேபரேலி, அமேதி தொகுதிகளில் இருந்த தொழிற்சாலைகளையும், வேலை வாய்ப்புகளையும் காவலாளி (மோடி) திருடியுள்ளார். காலியாக உள்ள 22 லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப மோடி விரும்பவில்லை. ஆனால், அவரது நண்பருக்கு உதவ விரும்புகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த 22 லட்சம் காலி பணியிடங்களும், பஞ்சாயத்துக்களில் காலியாக உள்ள 10 லட்சம் வேலைவாய்ப்புகளும் ஒரே ஆண்டில் நிரப்பப்படும். பரேலியை சேர்ந்த விவசாயி ஒருவர் வங்கியில் பெற்ற ரூ.20,000 கடனை திரும்ப செலுத்தாவிட்டால் அவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்தால், எந்த விவசாயியும் இதுபோன்று சிறைக்கு போக வேண்டியிருக்காது. விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் கொண்டு வரப்படும். அதில், குறைந்தபட்ச ஆதரவு விலை, புயல் பாதிப்பு நிவாரணம், பயிர் காப்பீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும்.

உங்களை முட்டாளாக்கியும், பொய் சொல்லியும், உங்கள் வீடுகளில் இருந்து பணத்தையும் எடுத்துக் கொண்ட மோடி, உங்களை தெருவில் நிற்க வைத்து விட்டு, ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக போராடுவதாக தெரிவிக்கிறார். உங்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை அனில் அம்பானி போன்ற திருடர்களிடம் கொடுத்து விட்டார். இந்த பணத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்களிடம் திரும்ப தருவோம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நீங்கள் பொருட்களை வாங்குவதை நிறுத்தி விட்டீர்கள்.

தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்திக்கொண்டு விட்டதால் வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது. எங்களின் குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம் மூலம் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைகளுக்கு மாதம் ரூ.6,000ம் உறுதியாக கிடைக்கும். பயிர் காப்பீடுக்காக நீங்கள் செலுத்திய பணத்தை, இழப்பை சந்திக்கும்போது நிவாரணமாக வழங்க அரசு மறுக்கிறது. உங்களிடம் இருந்து பயிர் காப்பீடாக பெறப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடியை அனில் அம்பானி போன்றோரிடம் மோடி வழங்கியுள்ளார். இவ்வாறு ராகுல் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government departments , Rahul, announcing the state department, 22 lakhs, the vacant job, will be filled
× RELATED குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள்...