×

வெளிநாட்டில் இருக்கும் சர்வர் 6 மணி நேரம் முடங்கியதால் ஏர்இந்தியாவின் 155 விமானம் தாமதம்: பயணிகள் கடும் அவதி

புதுடெல்லி: ஏர்-இந்தியா விமானத்தின் சர்வர் முடங்கியதால் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 155 விமானங்கள் தாமதமாகின. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர். மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானத்தின் சர்வரை அட்லாண்டாவை சேர்ந்த சீட்டா என்ற நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை 6 மணி நேரம் இந்த சர்வர்  திடீரென செயல்படவில்லை.

இதனால், உலகம் முழுவதும் முக்கிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து தாமதமானது. விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் வழங்கப்படாததால் பயணிகள் தங்கள் பயணத்தை தொடர முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மும்பையில் மட்டும்  2000 பயணிகள் தவித்தனர். இரவு 8.30 மணி வரை சுமார் 155 விமானங்கள் தாமதமானது.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை  இயக்குனர் அஸ்வனி லோகனி கூறுகையில், ‘‘ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் முன்பதிவு, போர்டிங் பாஸ் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ள சீட்டா நிறுவன சர்வர் பராமரிப்பு பணியின்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால், டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பயணிகளுக்கு பிரச்னை ஏற்பட்டது. தற்போது, இந்த கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது’’ என்றார். இது பற்றி சீட்டா வெளியிட்ட அறிக்கையில், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் என்ற கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Air India ,shutdown , Overseas, server, 6 hours, paralyzed, Air India, 155 aircraft, delayed
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...