×

உபா சட்டத்தில் கைதான இலங்கை வாலிபர் விடுதலை

சேலம்: சென்னையில் உபா சட்டத்தில் கைதாகி தண்டனை அனுபவித்த இலங்கையை சேர்ந்த வாலிபர், சேலம் சிறையில் இருந்து விடுதலையானார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில், ஓட்டல்களில் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர். மனித வெடிகுண்டாக மாறி 250க்கும் மேற்பட்டோரை கொன்றனர். ஏராளமானோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதையடுத்து தீவிரவாதிகள் குழுவை, போலீசார் இலங்கை முழுவதும் சல்லடை போட்டு தேடி வருகிறார்கள். அதேபோல் இந்தியாவிலும் உளவு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் இருந்த இலங்கையை சேர்ந்த தீவிரவாதி என கருதப்படும் வாலிபர் முகமது ஜாகீர் உசேன்(45) என்பவர் நேற்று விடுதலையானார். இவர் மீது தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் (என்.ஐ.ஏ) கடந்த 2014ம் ஆண்டு, சட்ட விரோத செயல்களுக்கான தடுப்பு நடவடிக்கை பிரிவின் கீழ் (உபா) வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முகமது ஜாகீர் உசேன், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு தண்டனை நேற்றோடு முடிந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் மேற்பார்வையில் போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து சென்றனர். அங்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan ,prisoner , Sri Lanka, young man, released
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!