×

புயல் எச்சரிக்கை எதிரொலி பலவீனமாக உள்ள ஏரி கரை, கால்வாய்களில் சீரமைப்பு பணி

* 24 மணி நேரம் அரசு அலுவலகங்களுக்கு மின்சாரம் வழங்க அறிவுரை
* செயற்பொறியாளர் தலைமையில்  கோட்ட வாரியாக குழு அமைப்பு

சென்னை: புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பொதுப்பணித் துறையில் செயற்பொறியாளர் தலைமையில் கோட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் சார்பில் பலவீனமாக உள்ள ஏரி கரை, கால்வாய்களில் தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஏப்ரல் 30ம் தேதி சென்னை-ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் சென்னை உட்பட வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிகிறது. இதை தொடர்ந்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம் சார்பில் தமிழக பொதுப்பணித்துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்பேரில் தமிழக பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம் அந்தந்த மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ஒவ்வொரு கோட்ட வாரியாக செயற்பொறியாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மேலும், அந்தெந்த கோட்ட செயற்பொறியாளர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் அவ்வபோது தொடர்பு கொள்ள வேண்டும். இந்த கோட்டங்களில் பணிபுரியும் பொறியாளர்கள் விடுப்பு எடுக்க கூடாது. மேலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களை 24 பணி நேரம் கண்காணிக்க வேண்டும். சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அணை, ஏரி, குளங்களின் நீர் இருப்பு விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், பொதுப்பணித்துறை உபகோட்ட அலுவலகங்களில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்  என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர்கள் தலைமையில் பொறியாளர்கள் குழுவினர் கால்வாய்களில் சேதமடைந்த பகுதிகளில் தற்காலிகமாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பலவீனமாக உள்ள ஏரி கரைகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு கோட்டத்திலும் நியமன முறை அடிப்படையில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அந்த நிறுவனங்கள் சார்பில் இந்த தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போன்று, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், ஜெனரேட்டரை இயக்க ேதவையான எரிபொருள்களும் வாங்கி வைக்கவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று அரசு அலுவலகங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், மின்சாரம் தடைபடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lake , Storm Warning, lake, canals
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு