×

ஈசிஆர் சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்காத ஆர்டிஓவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை அகலப்படுத்துவதற்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு தராமல்  5 ஆண்டுகள் இழுத்தடித்த செங்கல்பட்டு ஆர்டிஓவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள தேவனேரி கிராமத்தில் சேகர், பிரபாகரன் ஆகியோரின் 226 ச.மீ நிலத்தை கடந்த 2014ல் தமிழக அரசு கையகப்படுத்தியது. ஆனால் நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து சேகர் மற்றும் பிரபாகரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு செங்கல்பட்டு ஆர்டிஓவுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் 2016ல் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை ஆர்டிஓ அமல்படுத்தவில்லை. மனுதாரர்கள் தொடர்ந்து ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இழப்பீடு கேட்டு மனுக்கள் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

இந்நிலையில், சேகர், பிரபாகரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்டிஓ பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்னிலையில் கடந்த 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதும், செங்கல்பட்டு ஆர்டிஓ பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து,  ஆர்டிஓவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த தொகையை வழக்கு தொடர்ந்த சேகர், பிரபாகரன் ஆகியோருக்கு தரவேண்டும் என்றும் அபராத தொகையை ஆர்டிஓவிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் கலெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சம்மந்தப்பட்ட ஆர்டிஓவிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கலெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : landholders ,RTO ,road ,ECR , RTO, ECR road, Court
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு