×

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்க கூடாது என்று வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் அதிரடி

சென்னை: அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ஏ.பி.கீதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடந்த போது, பணப்பட்டுவாடா காரணமாக, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின், 2016 நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. செந்தில் பாலாஜியின் ஊழல் நடவடிக்கைகளால் தான் கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பதால், இம்முறை அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது. அவ்வாறு அவரை போட்டியிட அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதங்களை எடுத்துவைத்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘2016ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ததை மறைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதிகள், 15 நாட்களில் இந்த தொகையை சிறார் நீதி நிதியத்துக்கு செலுத்த வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tharoor ,Senthil Balaji ,disqualification ,DMK ,HC , DMK candidate,t Senthil Balaji, nomination,
× RELATED செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்...