×

சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம்: குடங்களோடு காத்திருக்கும் பொதுமக்கள்

* தண்ணீர் இல்லாமல் திணறும் ஓட்டல்கள், வணிக வளாகங்கள்

சென்னை மாநகரில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருவதால் பொதுமக்கள் காலி குடங்களுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் இல்லாமல் ஓட்டல்கள், வணிக வளாகங்கள் திணறுகின்றன. சென்னை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக  பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் விளங்குகிறது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகள் வடகிழக்கு பருவமழையை நம்பி உள்ளன. இந்நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்தது. இதன் காரணமாக, ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை. குறிப்பாக, கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை 4 ஏரிகளில் 1.8 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. இந்த நீரை கொண்டு மே மாதம் வரை குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்து விடுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று ஆந்திர அரசு கடந்த பிப்ரவரியில் தண்ணீர் திறந்து விட்டது. ஒரு டிஎம்சியாவது தண்ணீர் கிடைக்கும் என்ற தமிழக அரசு எதிர்பார்த்த நிலையில் 0.37 டிஎம்சி மட்டுமே ஆந்திரா தந்தது. இதன் காரணமாக சென்னை மாநகரின் குடிநீருக்கு தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, சென்னை மாநகருக்கு தினமும் 80 கோடி லிட்டர் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், தண்ணீர் தட்டுபாடு காரணமாக, 55 கோடி லிட்டர் மட்டுமே தண்ணீர் விநியோகிக்க  கடந்த மார்ச் மாதத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஏரிகளில் தண்ணீர் குறைவாக இருப்பதால் 30 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளில் 378 மில்லியன் கன அடி (0.37 டிஎம்சி) மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இந்த நீரை கொண்டு 10 நாட்களுக்கு முழுமையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏரிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வது தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2 முதல் 3 நாட்களுக்கு வரை 10 கோடி லிட்டர் மட்டுமே அங்கிருந்து விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், மீஞ்சூர், நெம்மேலி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 18 கோடி லிட்டர் மட்டுமே தினமும் தர முடியும். வீராணம் ஏரியில் இருந்து தினமும் 14 கோடி லிட்டர் மட்டுமே குடிநீருக்கு விநியோகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கல்குவாரிகள் மூலம் 2 கோடி லிட்டர் மட்டுமே தண்ணீர் பெறப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 30 கோடி லிட்டர் மட்டுமே குடிநீருக்காக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நீரை கொண்டு சென்னை மாநகர் முழுவதும் தினமும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 3 முதல் 6 நாட்களுக்கு ஒருமுறை சென்னை மாநகரில் ஒவ்வொரு பகுதியாக விட்டு,விட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நீரும் 45 நிமிடங்கள் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.  இதனால், மக்கள் காலி குடத்துடன் குழாய் அடியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தண்ணீர் தட்டுபாட்டை போக்க விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுக்க குடிநீர் வாரியம் முடிவு செய்தது. ஆனால், விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் இல்லாததாலும், பாசனத்திற்கு பயன்படாத ஏரிகளில் கழிவு நீராக இருப்பதாலும் அங்கு தண்ணீரை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டதால் ஆழ்துளை கிணறுகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலையில் சென்னை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க பல பகுதிகளில் 400 முதல் 600 அடி வரை போர்வெல் போட்டும் தண்ணீர் இல்லாமல் பணத்தை இழந்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர் வீட்டு உபயோகத்துக்கான தண்ணீர் கிடைக்காததால் பல வீடுகளில் கழிப்பிடம் செல்ல முடியாமல் அவதிப்படும் சூழ்நிலையில் சென்னை மக்கள் சந்தித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாததால் தினமும் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மெட்ரோ வாட்டர் லாரிகளுக்கு முன்பதிவு செய்தால் கூட ஏறக்குறைய 20 நாட்களுக்கு மேல் காத்திருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒன்று முதல் இரண்டு லாரி தண்ணீர் நாள் ஒன்றுக்கு தேவைப்படும் பட்சத்தில் ஒரு வாரத்துக்கு ஒரு லாரி தண்ணீரை வாங்குவதற்குள் படாதபாடு படுகின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி மெட்ரோ வாட்டர் ஒப்பந்த லாரிகள் கூடுதல் விலைக்கு தண்ணீர் முறைகேடாக விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, ஒரு லோடு லாரி தண்ணீர் ரூ.700 என்றால் ரூ.7 ஆயிரம் வரை பெற்று கொண்டு முறைகேடாக தண்ணீர் விற்பனை செய்கின்றனர். இதனால், தண்ணீர் கேட்டு முன்பதிவு செய்வர்களுக்கு 20 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் கிடைக்காத சூழல் தான் தற்போது நிலவி வருகிறது.  இதனால் மாத வாடகையே அவ்வளவு தான் கொடுக்கக்கூடிய எங்களால் இவ்வளவு பணம் கொடுத்து தங்க முடியாது என்று பல்வேறு குடும்பத்தினர் வீடுகளை காலி செய்து சென்னைக்கு வெளியில் தண்ணீர் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். வணிக வளாகங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாமல் திணறி வருகிறது. அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்க தயாராக இருந்தாலும், தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் ஏரிகளில் தண்ணீர் வறண்டு விடும் சூழல் இருப்பதால் அங்கிருந்து 10 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பது தடைபடும். அதே நேரத்தில் கல்குவாரிகளில் உள்ள நீரும் குறைந்து வருகிறது. தற்போதைய சூழலில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் மட்டுமே ெதாடர்ந்து தண்ணீர் விநியோகிக்க முடியும் என்பதால், சென்னையில் குடிநீர் பஞ்சம் விஸ்வரூபம் எடுக்கும் என்பதால் குடிநீர் வாரிய அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், அவர்கள் அடுத்த கட்டமாக என்னசெய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

மெட்ரோ வாட்டர் கேன் வாட்டராக விற்பனை
சென்னை மாநகரில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர். குடிநீர் வாரியத்தில் லாரிகள் மூலம் பொதுமக்கள் தண்ணீருக்காக முன்பதிவு செய்து காத்திருக்கும் சூழலில் மெட்ரோ வாட்டர் கேன் வாட்டர் குடிநீராக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடிநீர் வாரிய அதிகாரிகள் துணையுடன் இது அரங்கேறி வருகிறது. இந்த மெட்ரோ வாட்டர் தண்ணீர் ஒரு கேன் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தண்ணீருக்காக அல்லாடி வரும் பொதுமக்கள் வேறுவழியின்றி பணம் கொடுத்து மெட்ரோ வாட்டரை கேன் வாட்டராக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தண்ணீர் விற்பனைக்கு உதவும் அதிகாரிகள்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால், அப்பகுதியில் தண்ணீர் எடுக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி தான் சில கேன் வாட்டர் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 100க்கும் மேற்பட்ட கேன் வாட்டர் நிறுவனங்கள் அனுமதியின்றி தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகார் வந்தால் கூட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. வீடுகளில் கூட மெட்ரோ வாட்டர் நிறுவனங்களில் தண்ணீரை வாங்கி, கேனில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.

வீடுகளில் சிறு தொழில்கள்போல இவற்றை செய்கின்றனர். முறையான அனுமதி பெறுவதில்லை. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். புகார்கள் வந்தாலும், அதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. சோதனை நடத்துவதும் இல்லை. மேலும் வீட்டில் உள்ள போர்வெல் மூலமும் தண்ணீரை எடுத்து கேனில் அடைத்து விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இப்பகுதிகளில் நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்காவிட்டால் வரும் காலங்களில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய நிலத்தடி நீர் வாரியம் தமிழக அரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : civilians ,Madras , drinking water, famine, Madras, public
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை