×

பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா தொடர்ந்து டார்ச்சர் கானல் நீராகிறதா 152 அடி?

* தடையை மீறி பார்க்கிங் பணிகள் விறுவிறுப்பு
* தமிழக விவசாயிகள், மக்கள் கொந்தளிப்பு

தென்தமிழகத்தின்் பாசன வசதிக்காக, பிரிட்டனை சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக் பெரியாறு அணையை கட்டினார். இந்த அணை மூலம் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14,707 ஏக்கர் உட்பட மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்த நிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை கூறி அணையின் நீர்மட்டம் 142 அடியாகவும், பின்னர் அது 136 அடியாகவும் குறைக்கப்பட்டது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பேபியை பலமாக்குங்க... இவ்வழக்கில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையை பலப்படுத்திய பின் அணையில் 152 அடி தண்ணீர் தேக்கலாம் என கடந்த 2014, மே 7ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதை நிறைவேறாமலேயே இருக்கிறது. பார்க்கிங் படுத்தும் பாடு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த விடாமல் செய்யவே, பெரியாறு நீர்தேக்க பகுதியான ஆனவச்சாலில், கேரள வனத்துறையினர் கார் பார்க்கிங் அமைக்கும் பணிகளை தொடங்கி மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.  

இடைக்கால தடை விதிப்பு: இந்த இடம் பெரியாறு அணை நீர்தேக்கப்பரப்பு பகுதியாகும். இந்திய வனச்சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய சட்டங்களின்படி, புலிகள் காப்பக பகுதியில் கட்டுமான பணிகள் செய்ய அனுமதி இல்லை. எனவே கார் பார்க்கிங் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமுளியை சேர்ந்த தாமஸ் ஆபிரகாம், 2014, ஜூன் மாதம் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  இந்த வழக்கில், பெரியாறு புலிகள் காப்பகத்தில் பார்க்கிங் உள்பட இதர பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க 2015, செப். 5ல் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தமிழக அதிகாரிகள் ஆப்சென்ட்: மேலும் இந்த வழக்கில் மத்திய தலைமை நில அளவை அலுவலர் சொர்ணசுப்பாராவ் மற்றும் மத்திய வனத்துறை இயக்குநர் சோமசேகர் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். ஒரு மாதம் நடைபெற்ற இந்த ஆய்வில் தமிழக அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. பின் இருவர் குழு ஆய்வு அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே பெரியாறு புலிகள் சரணாலயம், கேரள அரசு சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கார் பார்க்கிங் பகுதியிலிருந்து தேக்கடி படகுத்துறை வரை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி காரை இயக்க உள்ளதாகவும், இதனால் வனவிலங்குகள் இயற்கை சூழலில் வாழ எந்த இடையூறும் இல்லை என, அப்போதைய பெரியாறு புலிகள் சரணாலய இணை இயக்குநர் சஞ்சயன்குமார் தீர்ப்பாயம் முன்பு நேரில் ஆஜராகி கருத்து தெரிவித்தார்.

கார் பார்க்கிங் துவக்கம்: இந்த வழக்கில் தமிழக அரசு தொடர் மவுனம் காத்து வந்தது. விசாரணையின் போதும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆஜராகவில்லை. எனவே, வாகன நிறுத்தத்திற்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை 2017, பிப். 20ல் பசுமைத்தீர்ப்பாயம் நிராகரித்ததோடு, ஆனவச்சால் பகுதியில் கட்டிடங்கள் இல்லாத வாகன நிறுத்தும் இடம் மட்டும் அமைத்துக் கொள்ள தற்காலிக உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, ஒரே வாரத்தில் வாகன நிறுத்துமிடத்திற்கான பணிகளை கேரள வனத்துறையினர் செய்து முடித்து, 2017 மார்ச் 1 முதல் கார் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் கடும் எதிர்ப்பு: இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் கேரள அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கட்டிடங்கள் இல்லாத தரையை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள பசுமை தீர்ப்பாயம் தற்காலிக உத்தரவு பிறப்பித்துள்ளபோது, பிரச்னைக்குரிய கார் பார்க்கிங் இடத்தில், கேரள வனத்துறையினர் தரையில் மண் போட்டு உயர்த்தி பேவர்பிளாக் கல் பதித்தல், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெரியாறு அணையின் நீர்தேக்கப்பரப்பான இப்பகுதியில், கார் பார்க்கிங் பணிகளை செய்து முடித்து விட்டால் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவது என்பது தமிழகத்தின் கனவாக போய்விடும் என்பதாலேயே தமிழக மக்கள், விவசாயிகளும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவின் சதித்திட்டம்... வாகன நிறுத்தம் கட்டுவது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கேரள அரசு அங்கு கட்டுமானப்பணிகளை தொடங்கி உள்ளது. இதற்கு தடை விதிக்கக்கோரி  கடந்த ஜூலை 9ம் தேதி தமிழக அரசு  தாக்கல் செய்த இடைக்கால மனுவை கோடை விடுமுறைக்குப்பின் (ஜூலை) விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள்து. அதற்கு முன்பாக, இந்த  பணிகளை முடித்து , திறப்பு விழாவை  நடத்த கேரள வனத்துறை திட்டமிட்டுள்ளது. புதிய அணை பூகம்பம்: கேரள அரசியலை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில், ‘பெரியாறு அருகே புதிய அணை’ என்பதே அம்மாநில வேட்பாளர்களின் உறுதிமொழியாக உள்ளது. சாத்தியக்கூறுகள் இல்லை என கைவிடப்பட்ட ஒரு திட்டத்தைக்கூறி, கேரள அரசியல்வாதிகள் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். கடந்த 23ம் தேதி நடந்த மக்களவை தேர்தலிலும் இதுவே முக்கிய உறுதிமொழியாக இருந்தது. கார் பார்க்கிங், புதிய அணை என தொடர்ந்து கேரள அரசு, பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. கேரள அரசு நீர்த்தேக்க பகுதிகளில் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதால், பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்துவது கனவாகவே முடிந்து விடும். இனியாவது தமிழக அரசு இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தென் தமிழகத்து மக்களின் பாசனம், குடிநீருக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் பெரியாறு அணையின்
நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த விடாமல் கேரள அரசு தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறது. தடையை மீறி நீர்ப்பிடிப்பில் கார் பார்க்கிங் அமைக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன. புதிய அணை என்ற
பூதத்தையும் கேரள அரசு கிளப்பி வருவதால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இது நீர்த்தேக்க கணக்கு
பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக நிலை நிறுத்தப்பட்டபோது நீர்தேக்கப்பரப்பு 8,593 ஏக்கர். மத்திய நீர்வள ஆணையத்தின் பேரில் மராமத்து பணிகளுக்காக 1979ல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டபோது, இது 4678.82 ஏக்கராக குறைந்தது. பின் 2014ல் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டபோது நீர்தேக்கப்பரப்பு 646 ஏக்கர் மட்டும் கூடி 5,324.82 ஏக்கரானது. மீதமுள்ள நீர்தேக்கப்பரப்பு நிலமான 3,268.18 ஏக்கர் நிலத்தில் தான் கேரள வனத்துறை கார் பார்க்கிங் அமைத்துள்ள ஆனவச்சால் பகுதி உள்ளது.

விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசு, அதிகாரிகள்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தேனி மாவட்ட செயலாளர் திருப்பதிவாசகன் கூறுகையில், ‘‘அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவதை தடுக்கவே பெரியாறு நீர்தேக்கப்பரப்பில் கேரள வனத்துறை கார் பார்க்கிங் பணியை தொடங்கி உள்ளது. அதை அப்போதே விவசாய சங்கம் எதிர்த்ததோடு, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தொடக்கத்திலே தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தினோம். ஆனால் அதிகாரிகளின் மெத்தனத்தாலேயே இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.

மீண்டும் ஜூலையில் வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் பார்க்கிங் பணிகள் முடிந்து, கேரளாவின் அழைப்பை ஏற்று, திறப்பு விழாவிற்கு தமிழக அதிகாரிகள் சென்று வருவார்கள். இந்தப்பிரச்சனையில் தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டியே தமிழக விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். கண்காணிப்பு குழு கூட்டங்களில் போடப்பட்ட தமிழகத்துக்கு சாதகமான எந்த ஒரு தீர்மானங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசும், அதிகாரிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததது தமிழக விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமே’’ என்றார்.

அங்கே ஒரு சட்டம் இங்கே ஒரு சட்டமா?
1978ல் தேக்கடி வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இந்திய வனச்சட்டத்தின்படி புலிகள் காப்பக பகுதியில் கட்டுமான பணிகள் செய்ய அனுமதி இல்லை. பெரியாறு அணைப்பகுதியில் தமிழகம் எந்த ஒரு பணியை செய்யும்போது வனச்சட்டத்தைக் காட்டி அனுமதி மறுக்கும் கேரள வனத்துறையினர், புலிகள் சரணாலயப்பகுதியில் கார் பார்க்கிங் பணிகளை செய்யும்போது பாதிப்பு ஏற்படாதா? அல்லது வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி குற்றம் ஆகாதா? இதற்கு கேரள அரசுதான் பதிலளிக்க வேண்டும். அல்லது உரிய பதிலளிக்குமாறு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஆய்வு ஏன்?
பெரியாறு அணை விவகாரத்தில் 2006ம் ஆண்டிலும், 2014, மே 7லும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகத்தெளிவானது. 2 தீர்ப்பிலும் புதிய அணையை கட்ட வேண்டும் என குறிப்பிடவில்லை. தற்போது 142 அடி தண்ணீர் தேக்கலாம். பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடி தண்ணீர் தேக்கலாம் என ஐவர்குழு தலைவர் நீதிபதி ஆனந்தின் அறிக்கையும், நீதிபதி சபர்வால் தீர்ப்பும் ஒரே மாதிரி இருந்தது. இந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக, கடந்த 2015 இறுதியில் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்து மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இப்பிரச்னையை மீண்டும், மீண்டும் கிளப்பி அரசியல் நடத்தி வருகிறது கேரளா.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala ,Periyar , Kerala, Periyar Dam issue,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு