×

கேரளாவில் 12 லட்சம் குடும்பங்களில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர், உறவினர்களால் ஆபத்து: அதிர்ச்சி ரிப்போர்ட் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளா, படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு தான் இந்தியாவிலேயே குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது என பெரும்பாலானோருக்கு தெரியாது. சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் கேரளாவிலுள்ள வர்த்தக நகரான கொச்சியில் தான் இந்தியாவிலேயே குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நகரில் தான் கோகைன், எம்.டி.எம்.எஸ். போன்ற மிக அரிதான போதைப் பொருள் அதிக அளவில் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே போதைப் பொருளை அதிகமாக பயன்படுத்துவதில் கொச்சி நகரம் 2வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் கேரளாவில் தான் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன் இடுக்கியில் 10 வயதான ஷபீக் என்ற சிறுவன் சொந்த தாய் மற்றும் அவரது 2வது கணவனால் கொடூரமான முறையில் அடித்து சித்திரவதை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த சிறுவன் பல மாதங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் தான் ஓரளவு உடல் நலம் தேறியது. தற்போது அந்த சிறுவனால் துணை இல்லாமல் எழுந்து நிற்கவோ, பேசவோ முடியாது.

இந்த சிறுவனை அடித்து கொடுமைப்படுத்திய தாய் மற்றும் அவரது 2வது கணவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பின்னர் கேரளாவில் குடும்பங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை கேரள அரசின் சமூக நலத்துறை அமைத்தது. இந்த கமிட்டி கேரளாவில் வீடு, வீடாக சென்று குழந்தைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி கேரளாவில் 11,72,433 குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பின்றி வளருவதாக தெரியவந்துள்ளது. இந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பெற்றோர், தந்தையின் 2வது மனைவி, தாயின் 2வது கணவன், மனநிலை பாதிக்கப்பட்ட தாய் அல்லது தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள், மது மற்றும் குடிபோதைக்கு அடிமையான பெற்றோர், குற்ற வழக்குகளின் பின்னணியில் உள்ள பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குடும்பங்களில் தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. தாயோ அல்லது தந்தையோ இறந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், விவாகரத்தான பெற்றோரில் ஒருவருடன் வசிக்கும் குழந்தைகளும் மன அல்லது உடல்ரீதியாக கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த ஆய்வின் படி கேரளாவில் 94,685 குடும்பங்களை சேர்ந்த பெற்றோர் கஞ்சா மற்றும் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டத்தில் தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அரசிடம் சிபாரிசு செய்யப்படும் என்று கேரள மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை இயக்குனர் ஷீபா ஜார்ஜ் கூறினார். இதற்கிடையே கேரளாவில் கடந்த இரு வாரங்களில் மட்டும் தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலனால் 3 குழந்தைகள்  கொடூரமான முறையில் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா மற்றும் கொச்சியை சேர்ந்த 2 குழந்தைகள் பரிதாபமாக மரணமடைந்தன. ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

சட்டத்தில் மாற்றம்  
இது குறித்து கேரள சமூக நலத்துறை அமைச்சர் ஷைலஜா கூறியதாவது: கேரளாவில் சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் வேதனையளிக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தற்போது மத்திய சட்டம் தான் அமலில் உள்ளது. இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இந்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. மேலும் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மிகவும் அவசியமாகும். குடும்பங்களில் தான் குழந்தைகள் அதிக அளவில் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1517 என்ற தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Parents ,Families ,Shock Reporter ,Kerala , Kerala, Parents, Riotors, Children,
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....