×

இலங்கை ராணுவம் அதிரடி வேட்டை 9 தீவிரவாதிகள் உட்பட 16 பேர் பலி: நாடு முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு

* குவியல் குவியலாக வெடிகுண்டுகள் சிக்கின

கொழும்பு: இலங்கை கல்முனை மாவட்டத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்தபோது, அவர்கள் 3 குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் 6 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 16 பேர் பலியாயினர். இவர்களில் 9 பேர் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அங்கிருந்து குவியல் குவியலாக வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் வெடிகுண்டு சம்பவங்களால் இலங்கை முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21ம் தேதி  தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில், ஈஸ்டர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 36 வெளிநாட்டினர் உட்பட 253 பேர் பலியாயினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு இலங்கையைச் சேர்ந்த, ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ என்ற அமைப்பினரை ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பயன்படுத்தி உள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை பாதுகாப்பு படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவன் ஜஹ்ரான் ஹாசிம் தலைமையில்தான் இலங்கையில் கடந்த 21ம் தேதி தொடர் தாக்குதல் நடந்துள்ளது. ஓட்டலில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் இவனும் பலியாகி விட்டான்.

  ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 140 ேபர் இலங்கையில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களை பிடிப்பதற்காக நாடு முழுவதும் ராணுவமும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதில், நேற்று முக்கிய திருப்பம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 360 கிமீ தொலைவில் உள்ள கல்முனை மாவட்டம், சாய்ந்தமருது என்ற பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வெளியூர் நபர்கள் சிலர் குடும்பத்துடன் தங்கியிருந்தனர். இவர்களின் நடவடிக்கை சந்தேகிக்கும் வகையில் இருந்ததால், அவர்கள்ளை பற்றி  அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே, அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சுற்றிவளைத்தனர். இதை அறிந்ததும், வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த அப்பாவி பெண்  ஒருவர் பலியானார். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதும், வீட்டில் பதுங்கி இருந்தவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

அந்த வீட்டில் அடுத்தடுத்து, 3 முறை குண்டுகள் பயங்கரமாக வெடித்தன. நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை இங்கு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. அங்கிருந்து 6 ஆண்கள், 3 பெண்கள், 6 குழந்தைகள் என மொத்தம் 15 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்களில் 9 பேர் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என பாதுகாப்பு படைகள் தெரிவித்தன. அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் டி56 ரக துப்பாக்கி, குவியல் குவியலாக வெடிகுண்டுகள், தற்கொலை தாக்குதலுக்கு தேவையான பொருட்கள், ராணுவ சீருடைகள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இச்சம்பவத்தை தொடர்ந்து, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கல்முனை, சவலக்காடே, சம்மன்துறை ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொது இடங்கள், பள்ளிகள், ஓட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், இலங்கை முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

இலங்கைக்கு உதவ இந்திய நிபுணர் குழு
தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன. பாதுகாப்பு குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப இந்தியாவும் முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் வெடிகுண்டு நிபுணர்கள், தீவிரவாத தடுப்பு பிரிவினர் இடம் பெறுவார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan Army ,hunters ,militants ,country , Sri Lankan Army, militants,
× RELATED முயல் வேட்டையாடிய இருவருக்கு ₹10,000 அபராதம்