×

காலை 6 மணிக்கு சென்னை செல்ல வசதியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாறுமா?: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்ற கோரிக்கை

நாகர்கோவில்: அனந்தபுரி எக்ஸ்பிரசை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்ற வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில்கள் என்று பார்த்தால் 3 இரவு நேர ரயில்களும், ஒரு பகல் நேர ரயிலும் இயக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் வாரம் மூன்று முறை, வாரம் ஒரு முறை என சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.  இதில் குருவாயூர் - சென்னை எழும்பூர் தினசரி பகல் நேர ரயில்,  நாகர்கோவில் - தாம்பரம்  அந்தியோதயா தினசரி ரயில் ஆகும். நாகர்கோவில் - தாம்பரம் வாரம் 3 முறை, நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர ரயில், கன்னியாகுமரி  - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில், கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி தினசரி ரயில், நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலாக உள்ளன.
இது தவிர நாகர்கோவில் - மும்பை வாரம் இருமுறை செங்கல்பட்டு வழியாகவும், கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர ரயில் சென்னை எழும்பூர் வழியாகவும், கன்னியாகுமரி  நிசாமுதீன் வாரம் இருமுறை சென்னை எழும்பூர் வழியாகவும் செல்கின்றன.

இந்த  ரயில்களில் இரவு நேரம் படுக்கை வசதியுடன் செல்லும் 3 ரயில்களில் முதல் ரயிலாக நாகர்கோவில் - தாம்பரம் (வாரம் 3 முறை) ரயில் மாலை 5 மணிக்கும், இரண்டாவது ரயில் கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் தினசரி ரயில் மாலை 5.40 மணிக்கும், மூன்றாவது ரயிலாக அனந்தபுரி ரயில் மாலை 6 மணிக்கும் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்று விடுகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை உள்ள ஒரு மணி நேர இடைவெளியில் மூன்று ரயில்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்று விடுகிறது.
இவ்வாறு சென்னைக்கு சென்று விடுவதால் சில பயணிகள் காலதாமதமாக சென்னைக்கு செல்லவோ அல்லது அதிகாலை சென்னைக்கு செல்லவோ ரயில் வசதி இல்லை. இது மட்டுமில்லாமல் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை செல்லும் முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்டு இயங்கும் அந்தியோதயா ரயில் 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தான் தாம்பரம் போய் சேருகிறது. ஆகவே இந்த ரயில்களை ஒழுங்குபடுத்தி ஒரு ரயில் முதலில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அதி காலையில் சென்னை செல்லத்தக்க வகையிலும், இரண்டாவது ரயில் ஒரு மணி நேரம் இடைவெளி விட்டு புறப்பட்டு செல்ல வேண்டும். மூன்றாவது கடைசி ரயிலாக இன்னும் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்னை செல்ல வேண்டும்.

குறிப்பாக கொல்லத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அனந்தபுரி ரயில் கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாவை சேர்ந்த  பயணிகள் அதிக அளவில் தலைநகருக்கு செல்ல இந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலை சூப்பர் பாஸ்டு  ரயிலாக மாற்றம் செய்து அதிகாலை 6 மணிக்கு சென்னை செல்லதக்க வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னைக்கு அதிகாலையில் சென்று சேருவதால் இந்த ரயில் தான் குமரி மக்களின் முதல் முக்கிய ரயிலாக உள்ளது. கன்னியாகுமரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணத்துக்கு வரும் பயணிகளும் இந்த  எக்ஸ்பிரஸ் ரயிலையே நம்பி உள்ளனர். இந்த ரயிலின் கால அட்டவணையை மாற்றம் செய்து இயக்க வேண்டும். இதன்படி இந்த ரயிலை இரவு 7 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படுமாறு மாற்றம் செய்து சென்னைக்கு காலை 7 மணிக்கு போய் சேருமாறு மாற்றம் செய்ய வேண்டும்.

மறுமார்க்கம் இந்த ரயிலின் வேகத்ததை அதிகரித்து சென்னையிலிருந்து புறப்படும் நேரத்தை மாற்றம் செய்யாமல் அதிகாலை 4.45 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேருமாறு மாற்றம் செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்குவதால் இந்த ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா மற்றும் ஆன்மீக பக்தர்கள் ஒரே நாளில் கன்னியாகுமரியில் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவதை பார்த்து இந்த ரயிலில் பயணிக்க  வசதியாக இருக்கும் என்று பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். வாரத்தில் 3 நாட்கள் இயங்கும், நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். நாகர்கோவிலில் இருந்து மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயிலின் காலஅட்டவணையையும், வழித்தடத்தை திருச்சி செல்லாமல்  மாற்றம் செய்து இயக்க வேண்டும். இதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லாமல் மதுரை, கரூர், நாமக்கல், சேலம் வழியாக அதிகாலை 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லதக்க வகையில் இயக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் இந்த ரயிலின் சேவையை அதிகரித்து வாரம் மூன்று நாள் செல்லத்தக்க வகையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை அனுப்பி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ananthapuri Express Superfast Train ,Chennai ,departure ,Kanyakumari Express , Ananthapuri Express, Fast Train, Kanyakumari Express, Time
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...