×

மதுரை வாக்கு மைய விவகாரம்: வட்டாட்சியர்கள் எது செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பிர்களா?...உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஒரு தபால்காரர் தான் என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 18ம் தேதி 38 மக்களவை தொகுதிக்கும், 18  சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிவடைந்தது. மதுரை மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு, மதுரை மருத்துவக்கல்லூரியில் உள்ள 6  அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையும் சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை கலால் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றும்  (தாசில்தார்)  சம்பூரணம் உள்ளிட்ட 4 பேர், நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் மதுரை மருத்துவக் கல்லூரியில் மதுரை மேற்கு தொகுதிக்கான தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றனர்.

அப்போது சில ஆவணங்களை சம்பூரணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து, தனியார் ஜெராக்ஸ் கடையில்  நகல் எடுத்துள்ளார். தகவல் அறிந்து திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக  வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை உள்ளிட்டோர் மருத்துவக் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த அதிகாரிகளிடம், பெண் அதிகாரி உள்ளே இருந்தபோது பதிவான சிசிடிவி பதிவுகளை கேட்டனர். இதற்கு அவர்கள் சிசிடிவி  இயங்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக வேட்பாளரை தவிர மற்ற வேட்பாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு, எதிர்க்கட்சி  வேட்பாளர்கள் புகார் அனுப்பினர். தொடர்ந்து பெண் அதிகாரி சம்பூர்ணம் உள்ளிட்ட 4 பேரையும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு தேர்தல் பிரிவு அதிகாரி மணிமொழியிடம்  ஒப்படைத்தனர். விசாரணையில் மதுரை மேற்குத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குருசங்கரின் டைரியை எடுக்கச் சென்றதாக சம்பூர்ணம் கூறியுள்ளார்.

இதையடுத்து அறிக்கை தொடர்பாக பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து, பெண் தாசில்தார் சம்பூர்ணத்தை சஸ்பெண்ட் செய்து  கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார். பெண் அதிகாரி, தான் எடுத்து வந்த ஆவணத்தை தனியார் ஜெராக்ஸ் கடையில் நகல் எடுத்து உடன் வந்த அந்த 3 பேரிடம் கொடுத்துள்ளார். ஆதலால் கலால்வட்டாட்சியர் சம்பூர்ணத்திற்கு  உதவியதாக பதிவறை எழுத்தர் சீனிவாசன், மாநகராட்சி இளநிலை உதவியாளர் ராஜபிரகாஷ், துப்புரவு பணியாளர் சூரிய பிரகாஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் சென்றது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   வழக்கு இன்று விசாரணகை்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். மதுரை ஆட்சியரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது?; வட்டாட்சியருக்கு உள்ள  அதிகாரம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு இல்லையா?: வட்டாட்சியர்கள் எது செய்தாலும் கண்டுகொள்ளாமல் தலைமை தேர்தல் அதிகாரி இருந்துவிடுவாரா? என்ற கேள்விக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி ஒரு போஸ்ட் மேன்  மாதிரிதான், தலைமைத் தேர்தல் அதிகாரியால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பதிலளித்துள்ளார். யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்றால் பாதுகாப்பே இல்லை  என்றுதான் அர்த்தம் என்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மாவட்ட ஆட்சியர் தினமும் சென்றாரா? நேர்மையான தேர்தலை நடத்துவதாக கூறும் ஆணையம் இதிலும் அப்படித்தானே செயல்பட்டிருக்க  வேண்டும் என்றனர்.

இதற்கு மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன; ஆட்சியரின் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில் வட்டாட்சியர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார் என்றும்  தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை அடிப்படையில் 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்றார். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரை நீதிமன்றம் காத்துகொண்டிருக்க முடியாது; மதுரை மாவட்ட  ஆட்சியர் இடமாற்றம் குறித்து இன்று மாலை உத்தரவிடுவோம் என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai Vote Center Affair ,High Court , Madurai Vote Center, Vattatti, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...