×

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மந்தகதியில் நடக்கும் பாதாளசாக்கடை பணி

நாகர்கோவில் :  நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில்  ₹76 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணி கடந்த மார்ச் 2013ம் ஆண்டு தொடங்கியது. இதற்கான அரசாணை 2012ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மொத்தம் 52 வார்டுகள் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் 18 வார்டுகள் முழுவதும், 17 வார்டுகளில் பகுதியாக பாதாளசாக்கடை பணிகள் தொடங்கியது.   மொத்தம் 118 கிலோ மீட்டர் தொலையில் அமைக்கப்படுகிறது. பணி தொடங்கி 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் முடியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நீதிமன்ற வழக்கு மற்றும், நெடுஞ்சாலைதுறை அனுமதி என சில இடர்பாடுகளால் பாதாளசாக்கடை பணி முடிவடைய காலதாமதம் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் பாதாளசாக்கடை குறிப்பிட்ட நாட்களில் முடிக்கப்படாததால் நீதிமன்றத்திற்கு சிலர் சென்றதால், பணியில் மேலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அரசியல் பிரமுகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 பாதாளசாக்கடை பணி தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள்  முடிக்கப்படாததால் மத்திய அரசு வழங்கவேண்டிய ₹52 கோடியை மாநில அரசு வழங்கியுள்ளது. தற்போது மீண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது. பாதாளசாக்கடை வழியாக வரும் கழிவுகள் வடிவீஸ்வரம் பரக்கிங்கால் பகுதியில் அமையும் கழிவுநீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,  அங்கிருந்து வலம்புரிவிளை உரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு  கழிவுகள் உரமாகவும், நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வகையிலும் பிரிக்கப்படுகிறது.

  தினமும்  175 லட்சம் லிட்டர் தண்ணீர் இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் பிரிக்கும் வகையில் 28 மீட்டர் விட்டமும், 5.5 மீட்டர் உயரமும் கொண்ட 2 பிளாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  இந்த சுத்திகரிப்பு நிலையம் ₹17கோடிசெலவில் அமைகிறது.  இதுபோல் பரக்கின்கால் பகுதியில்  கழிவுநீரேற்று நிலையம் ₹6 கோடியில் நடக்கிறது.

 இந்த பணிகள் பாதாளசாக்கடை பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில்  நடக்கிறது. கழிவு நீரேற்று நிலையத்தில் மொத்தம் 3 பிளாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.   இந்த பிளாண்டுகளில் ,  தேவையில்லா பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் அகற்றப்பட்டு, பின்னர் வலம்புரிவிளை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவு நீர்அனுப்பப்படும்.  
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் இன்னும் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்படவுள்ளது.  குறிப்பாக கலெக்டர் அலுவலகம் முன்பு செல்லும் தேசிய நெடுஞ்சாலை,  கம்பளம் பகுதி, மற்றும் குறுகலான பல பகுதிகளில் பணி செய்யவேண்டியுள்ளது.

ஒரு சில பகுதியில் குழாய்கள் பதிக்கமுடியாத நிலை இருந்து வருகிறது. இனி நடக்க வேண்டிய பணிகள் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் ஆகும். இதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை உரிய அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுபோல் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள கம்பளம் பகுதியில் பெரிய குழாய் பதிக்க வேண்டியுள்ளது. இந்த குழாய்கள் பதிக்கும் போது வர்த்தக நிறுவனங்களுக்கு சேதம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பணிகள் முடிந்த இடங்களிலும் வீடுகளுக்கு குழாய் பதிக்காமல் உள்ளனர்.  பல பகுதிகளில் குழாய் பதிக்கப்பட்ட சாலைகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் குழாய் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இதுபோல் நாகர்கோவில் நகர பகுதியில் உள்ள பல தெருக்களில் பாதாளசாக்கடை பணி முடிந்தும்,  சாலைகள் சீரமைக்காமல் உள்ளது. இதனால் தெருக்கள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதாளசாக்கடை பணியை விரைந்து முடிக்க மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

95 சதவீதம் முடிவடைந்தது

இது குறித்து குடிநீர்வடிகால் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது: பாதாளசாக்கடை பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது சுத்திகரிப்பு நிலையத்திற்கும் கழிவுநீரேற்றுநிலையத்திற்கும் இடையே குழாய் பதிக்கும் பணி நடக்க இருக்கிறது.  தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குழாய்கள் பதிக்க வேண்டியுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagarcoil Municipal Corporation ,area , Nagarcoil ,Municipal Corporation,underground drainage,work
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...