×

இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்ல விருப்பம்; கோமதி மாரிமுத்து... திமுக ரூ.10 லட்சம் பரிசு

சென்னை: வெளிநாட்டில் நல்ல பயிற்சி பெற்று இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்ல விருப்பம் உள்ளதாக கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார். தனக்கு வெளிநாட்டு பயிற்சி தேவை என ஆசிய தடகள போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி கோரிக்கை விடுத்துள்ளார். இளம் வீராங்கனைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு முன்வர வேண்டும் என்று கோமதி வலியுறுத்தினார். தமிழ்நாட்டுக்காக விளையாட தமக்கு நிறைய தடைகள் வந்ததாக தங்க மங்கை கோமதி பேட்டியளித்தார்.

தனக்கு வழங்கப்படும் அரசு வேலைக்கான இடத்தை தமிழகத்தில் ஒதுக்கினால் உதவிகரமாக இருக்கும் என்றும் விளையாட்டு வீரர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். என்னை போல் பல வீராங்கனைகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்று தெரிவித்த கோமதி, மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் தான் பயிற்சியை மேற்கொண்டதாகவும், ஊக்கமளித்தால் தொடர்ந்து சாதனை புரிவேன் என்று ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து பேட்டியளித்தார்.

தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நேற்று பகல் 1 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த நான், ஆசிய போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பெங்களூருவில் வருமான வரித்துறையில் வேலை செய்து வருகிறேன். தமிழ்நாட்டில் வேலைக்காக முயற்சித்தும் கிடைக்கவில்லை. அதனால் தான் கர்நாடகாவில் வேலை செய்கிறேன். புதிய விளையாட்டு வீரர் வீராங்கனைகளை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.  

திமுக ரூ.10 லட்சம் பரிசு

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற கோமதிக்கு ரூ.10 லட்சம் பரிசு திமுக அறிவித்தது. வெள்ளி வென்ற தமிழக வீரர் ஆரோக்கியராஜீக்கு திமுக சார்பில் ரூ 5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

தமிழக காங். ரூ.5 லட்சம்

கோமதி மாரிமுத்துக்கு தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கே.எல்.அழகிரி தெரிவித்துள்ளார். தோஹாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Olympic Games ,India ,Gomti Marimuthu ,DMK , Gomti Marimuttu, Asian athletic competition, gold, TN player
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...