×

சுவையை அதிகரிக்கஓட்டல் உணவுகளில் ரசாயனம் கலப்படம்

* உணவுத்துறை அதிகாரிகள் மெத்தனம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி நகர் மற்றும் சுற்றி உள்ள ஓட்டல்களில் சுவைக்காக நச்சுத்தன்மை உள்ள ரசாயன பொடிகளை கலப்பதால் பொதுமக்கள் பல நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியை சுற்றி க.விலக்கு, கண்டமனூர், பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, ராஜதானி, கன்னியப்பபிள்ளைபட்டி உள்ளிட்ட பெரியகிராமங்கள் மற்றும் ஆண்டிபட்டி நகரில் 200க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளன.

விவசாயம் சார்ந்த மற்றும் பல்வேறு கூலித் தொழிலாளர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஓட்டல்களில் சாப்பிட்டு வருகின்றனர். பெரும்பாலும் அசைவ உணவு வகைகளில் சுவையை அதிகரிப்பதற்காகவும், மணத்திற்காகவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன தன்மை உடைய பொருளை கலப்படம் செய்கிறார்கள். இதனால் இதனை உண்ணும் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் ஜீரணக் கோளாறு மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள்.

மேலும் மட்டன், சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகள் பலகாரங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் தரமற்றதாகவும், ஒரு வாரத்திற்கும் மேல் அதே எண்ணெய் பயன்படுத்துவதால் உணவில் நச்சுத்தன்மையே ஏற்படுகிறது.சில கடைகளில் சீக்கிரம் சாப்பாடு தயாரிக்கவும், அதிகமாக சாப்பிட்டு விடக் கூடாது என்பதற்காகவும், சோறு சமைக்கும் போது சுண்ணாம்பை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வியாதியை விலை கொடுத்து வாங்குவது போல ஆகிவிடுகிறது.

பாலித்தீன் பயன்பாடு கூடாது என்று நீதிமன்றங்களும் அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஆண்டிபட்டி நகர் பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் டீக்கடை, பேக்கரிகளில் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்புறம் உள்ள ஓட்டல்களில் சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து கொடுப்பதால், அவை இளகி உணவோடு ஒட்டிக் கொள்ளும் நிலை உள்ளது.

இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டிய உணவு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதால் ஆண்டிபட்டி பகுதியில் கலப்படம் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்ந்து கொண்டுள்ளது. எனவே வரும் காலங்களிலாவது பொது மக்களின் நலன் கருதி உணவு விசயத்தில் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி முனைப்புடன் செயல்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : andipatty ,chemicals ,Taste, hotels
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...