×

அரைசதம் விளாசினார் ரோகித்: சிஎஸ்கே அணியை வீழ்த்தியது மும்பை

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. டோனி, ஜடேஜா, டு பிளெஸ்ஸிக்கு ஓய்வளிக்கப்பட்டு சான்ட்னர், துருவ் ஷோரி, முரளி விஜய் சேர்க்கப்பட்டனர். சுரேஷ் ரெய்னா கேப்டன் பொறுப்பேற்றார். மும்பை அணியில் பென் கட்டிங், மார்கண்டேவுக்கு பதிலாக எவின் லூயிஸ், அனுகுல் ராய் (அறிமுகம்) இடம் பெற்றனர். மும்பை தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித், டி காக் களமிறங்கினர். டி காக் 15 ரன் எடுத்து சாஹர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராயுடு வசம் பிடிபட்டார். அடுத்து ரோகித்துடன் லூயிஸ் இணைந்தார்.பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தனர். லூயிஸ் 32 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேற, அடுத்து வந்த குருணல் பாண்டியா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

அரை சதம் விளாசிய ரோகித் 67 ரன் எடுத்து (48 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) சான்ட்னர் பந்துவீச்சில் விஜய் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  கடைசி கட்டத்தில் ஹர்திக் - போலார்டி ஜோடி ஸ்கோரை உயர்த்த போராடியது. மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது. ஹர்திக் 23 ரன், போலார்டு 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே பந்துவீச்சில் சான்ட்னர் 2, சாஹர், தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக விஜய், வாட்சன் துரத்தலை தொடங்கினர். மலிங்காவின் முதல் ஒவரிலேயே அடுத்தடுத்து இரண்டு பவுண்ரிகளை விளாசி 5வது பந்தில் அவுட் ஆகிய வாட்சன் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ரெய்னா, பாண்டியாவின் பந்தில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் ஆனார்.

அவருக்கு பின் வந்த ராயுடு டக்அவுட் ஆனார்.  அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவும் குர்னால்பாண்டியாவின் பந்தில் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் ரன்வேகம் மந்தமானது. பின்னர் வந்த துருவ் ஷோரே அங்குல் ராயின் பந்தில் ராகுல் சாகரிடம் கேட்ச் ஆக, சற்று தாக்குபிடித்து ஆடிக்கொண்டிருந்த முரளி விஜய் பூம்ராவின் பந்தில் யாதவிடம் கேட்ச் ஆனார். விஜய் 35 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். முரளியை பின்தொடர்ந்து பிராவோ, தீபக் சாகர், ஹர்பஜன் சிங் மற்றும் மிட்செல் சான்ட்சர்  ஆகியோரும் சோபிக்கவில்லை. இதனால் கடைசியில் மும்பை அணி 46  ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் டோனி இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rohit ,team ,CKC ,Mumbai , csk,mumbai indians,ipl
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...