×

16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

சென்னை: 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால் போக்சோ சட்டத்தில் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்ததாக பெலுகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் நீதிமன்றம், சபரிநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து 2018 ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சபரிநாதன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னை யாரும் கடத்தவில்லை என்று பிறழ் சாட்சியம் அளித்ததை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. எனவே, விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சபரிநாதன் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, வழக்கில் சபரிநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதால் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.தீர்ப்பில் நீதிபதி மேலும் கூறியிருப்பதாவது: போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு அரசு தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், தமிழகம் முழுவதும் மண்டல அளவிலும், பள்ளிகளிலும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. காவல் துறையில் 523 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 20 டிஎஸ்பிக்கள், 2232 இன்ஸ்பெக்டர்கள், 15,475 சப்-இன்ஸ்பெக்டர்கள் போக்சோ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பயிற்சி பெற்றுள்ளனர். திரைப்படங்கள், சுவர் விளம்பரங்கள் மூலம் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

 போக்சோ சட்டத்தை விளம்பரப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், அதுதொடர்பான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த குற்றங்களை குறைப்பதற்கு அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.வளர் இளம் பருவ (டீன் ஏஜ்) உறவு பற்றி எடுக்கப்படும் திரைப்படங்களை திரையிடும் போது, அதில் போக்சோ சட்டம் குறித்த எச்சரிக்கையை இடம்பெற செய்ய வேண்டும். 18 வயதுக்கு கீழான ஆண்-பெண் காதல் திருமணம் செய்யும் போது, 7 ஆண்டு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க போக்சோ சட்டம் பயன்படுத்தப்படுகிறது.  போக்சோ சட்டத்தில் 18 வயது வரை சிறுமிகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.  இந்த வயதை 16 வயதாக குறைக்க வேண்டும். 16 வயதை தாண்டியவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால், போக்சோ சட்டத்தில் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

குற்றத்தின் தன்மை குறித்து அறியாத வயதில் கவர்ச்சி காரணமாக இதுபோன்ற குற்றங்களில் இளம் வயதினர் ஈடுபடுகிறார்கள். தற்போது 24 மணி நேரமும் தணிக்கை செய்யப்படாத ஆபாச காட்சிகள் இணைய தளங்களில் கிடைக்கின்றன. இந்த படங்களும், வீடியோக்களும் கையில் வைத்திருக்கும் செல்போனில் எளிதாக கிடைக்கின்றன. இதுபோன்ற இணைய தளங்களைப் பார்க்கும் இளம் வயதினர் தவறான பாதைக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பல திரைப்படங்களில் பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இவை பெண்களையும், பெண் குழந்தைகளையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சூழலை ஏற்படுத்திவிடுகின்றன.

இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். பாலியல் குற்றங்கள், போக்ேசா சட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்டனை, அதனால் வாழ்வு சீரழிவது போன்றவை குறித்து இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும். சமூகத்தின் பிணியாக மாறியுள்ள போக்சோ குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Government of Tamil Nadu ,Paxo , 16 years old, Relationship, Tamilnadu Government, High Court
× RELATED அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40%...