சென்னையில் பதுங்கி இருந்த அசாம் தீவிரவாதி அதிரடி கைது: தனியார் மருத்துவமனையில் ஊழியராக இருந்ததும் அம்பலம்

* தனது இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்க தமிழகத்தில் தஞ்சம்

சென்னை: அசாம் மாநிலத்தை சேர்ந்த நக்சல் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியான கந்தர்ப்ப தாஸ் சென்னையில் பதுங்கி இருந்த போது க்யூ பிரிவு போலீசார் உதவியுடன் மாநகர போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தில் தனது இயக்கத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்காக வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 ேபர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த நபர்களை மத்திய உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் க்யூ பிரிவு போலீசார் மாநகர போலீசார் உதவியுடன் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த நபர்களை கண்காணித்து வந்தனர்.

இதற்கிடையே, சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு ஊழியராக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கந்தர்ப்ப தாஸ் (23) என்பவர் சேர்ந்து வேலை செய்து வந்தார். ேநற்று முன்தினம் சக ஊழியர் ஒருவருடன் அவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது சக ஊழியரை கடுமையாக தாக்கி ‘என்னிடம் மோதாதே பலரை கொலை செய்து விட்டு தான் வந்து இருக்கிறேன், நான் நினைத்தால் இப்போதே உன்னை கொன்று விடுவேன்’ என்று ஆக்ரோஷத்துடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கந்தர்ப்ப தாஸ் வேலை செய்யும் மருத்துவமனையில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி ராமதாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தகராறில் ஈடுபட்ட இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தி உள்ளார். அப்போது ஓய்வு பெற்ற டிஎஸ்பியையும் மிரட்டும் வகையில் கந்தர்ப்ப தாஸ் பேசியுள்ளார். அசாம் மாநிலம் என்பதால், ஓய்வு பெற்ற டிஎஸ்பிக்கு கந்தர்ப்ப தாஸ் நக்சல் தீவிரவாதியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்தது.

உடனே, அவர் தனது செல்போனில் யூ-டியூப்பில் நக்சல் தீவிரவாத இயக்கம் குறித்த வீடியோக்களை பார்த்துள்ளார். அப்போது, மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி என்ற இடத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நக்சல் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். அதில், மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வரும் கந்தர்ப்பதாஸ் உருவம் போன்று ஒருவர் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு உடனே க்யூ பிரிவு போலீசாருக்கு ராமதாஸ் ரகசிய தகவல் தெரிவித்தார். அதன்படி, க்யூ பிரிவு போலீசார் கந்தர்ப்பதாஸ் குறித்த தகவல்களை அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள போலீசாரிடம் கேட்டுள்ளனர். அப்போது, மேற்கு வங்க மாநிலத்ைத தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் நக்சல் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய நபர் என்றும், அவரை தாங்கள் தேடி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே க்யூ பிரிவு போலீசார் அமைந்தகரை போலீசார் உதவியுடன் நேற்று அதிகாலை 3 மணிக்கு அமைந்தகரை அய்யாவு காலனியில் தங்கியிருந்த நக்சல் தீவிரவாதி கந்தர்ப்ப தாசை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மேற்கு வங்கத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவாகி நண்பர்கள் உதவியுடன் தமிழகத்திற்கு வந்ததும் தெரியவந்தது. தமிழகத்தில் தனது நக்சல் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் வந்ததாக அதிர்ச்சி தகவலை விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து மாநகர போலீசார், கைது செய்யப்பட்ட நக்சல் தீவிரவாதியை க்யூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  பிறகு இந்த வழக்கையும் க்யூ பிரிவுக்கு மாற்றினர். பிடிபட்ட நக்சல் தீவிரவாதியை க்யூ பிரிவு போலீசார் தற்போது ரகசிய இடத்தில் வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் தமிழகத்திற்கு வந்து ஒரு மாத காலத்தில் நக்சல் இயக்கத்திற்கு ஆட்களை யாரேனும் சேர்த்துள்ளாரா, நக்சல் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் ஏற்கனவே தங்கி உள்ளார்களா, ஜாமீனில் வெளியே வந்த பிறகு யாருடன் தமிழகம் வந்தார், தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்த்து விட்டது யார், இவருடன் அறையில் தங்கி இருந்த நபர்கள் யார் யார், அவர்கள் பின்னணி என்ன என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்ைனயில் நக்சல் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது ெசய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Assam ,Chennai , Chennai, Assam terrorist, arrested, private hospital
× RELATED அசாமில் நிலநடுக்கம்