×

தமிழகம் முழுவதும் உஷார் நிலை பானி புயல் இன்று வலுக்கிறது: 30ம் தேதி சென்னை அருகே கரை கடக்கும்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயலாக வலுப்பெறுகிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை-ஆந்திராவை ஒட்டிய பகுதியில் 30ம் தேதி கரை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வங்கக் கடலில் இலங்கையை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம்,  மத்திய தரைக் கடல் பகுதியில் இ ருந்து புதியதாக ஒரு காற்று சுழற்சி நிலை கொண்டது. அது மெல்ல மெல்ல வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. நேற்று முன்தினம் அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் நேற்று மாலை ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறும். இந்த புயலுக்கு ஃபானி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் நாளை மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும். அப்படி தீவிர புயலாக மாறியபின்னர் இலங்கையை ஒட்டிய பகுதிக்கு நெருங்கி வரும். பின்னர் அது வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிக்கு வரும். 29ம் தேதி தமிழக கடலோரப் பகுதியில் அந்த புயல் வரும் போது தமிழக கடலோரப் பகுதியில் பலத்த மழை பெய்யும். இடியுடன் சூறைக்காற்று வீசும்.  இந்நிலையில் தமிழக கடலோரப் பகுதியில் நேற்று பல்வேறு இடங்களில் கடலில் கடுமையான கடல் சீற்றம் நிலவியது. சில இடங்களில் கடல் நீர் கரைப் பகுதிக்கு வந்தது. நேற்று முன்தினம் இரவு முதலே கடலில் மணிக்கு 40 கிமீ வேகம் முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. தற்போது புயல் தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்வதால் கடலில் மேலும் பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதன்படி மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தோகையாறு பகுதியில் 20மிமீ மழை பெய்துள்ளது. கொடைக்கானலில் 10மிமீ மழை பெய்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவியதால் வெயிலின் தாக்கம் வழக்கம் போல 102 டிகிரி வரை இருந்தது. தற்ேபாது புயல் வலுப்பெற்று வருவதை அடுத்து குமரிக்கடல் பகுதியில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது. அதனால் பெரும்பாலான இடங்களில் மழையின் தாக்கம் குறைந்துள்ளது. புயல் தமிழக கடலோரப் பகுதியில் நெருங்கி வரும் போது மாமல்லபுரம், தொண்டி, மரக்காணம், மணல்மேல் குடி, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை பகுதிகளில் பெரும்பாலும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.  கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது 30ம் தேதி வட தமிழகத்தை ஒட்டி வடக்கு ஆந்திரா மற்றும் விசாகப்பட்டினம் பகுதியில் கரை கடக்கும். புயல் கரை கடக்கும் போது, மணிக்கு 115 கிமீ வேகத்தில் காற்று வீசும். வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும். கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளதால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் ஏதும் இல்லை என்று ெ்சன்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் புயலை ஒட்டி தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் புயல் மையம் கொண்டுள்ளதை அடுத்து, தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது. பின்னர் அது வடமேற்கு திசையில் நகரும் என்பதால் தமிழக கடலோரப் பகுதியில் புயல் எச்சரிக்கையை அரசு விடுத்துள்ளது. மேலும் புயல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதையடுத்து, துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொடியும் ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி,

* புயல் தூரத்தில் இருப்பதை காட்டும் புயல் எச்சரிக்கை கூண்டு 1 மற்றும் அதன் உட்பிரிவு 5ம் எண் கொடிகள் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ளது.
* புயல் தூரத்தை காட்டும் எச்சரிக்கை 1ம் எண் கூண்டு எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஏற்றப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Tamil Nadu ,Bani ,Chennai ,coast , Tamil Nadu, Bani Storm, Chennai, crossing the border
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு...