×

அரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்கியதில் முறைகேடு விசாரிக்க கோரி மனு; ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி

மதுரை: மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகம் முழுவதும் சுமார் 6,362 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பொருளாதாரரீதியாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பயில்கின்றனர். ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆய்வகப்பொருட்கள் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கென மத்திய அரசு தொகையை ஒதுக்குகிறது.

ஆய்வு பொருட்களுக்கு என பள்ளி ஒன்றுக்கு ரூ.45 ஆயிரம், நூலகத்திற்கு புத்தகங்களை வாங்குவதற்கென ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த தொகை முறையாக செலவிடப்படுவதில்லை. இதற்கான டெண்டர் வெளிப்படையாக நடைபெறுவதில்லை. தரம் குறைந்த ஆய்வகப்பொருட்கள் மற்றும் புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. இதில் பெரும் முறைகேடு நடைபெறுகிறது. அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2018-19ல் வாங்கப்பட்ட ஆய்வகப்பொருட்கள் மற்றும் நூலக புத்தகங்களின் தரம்குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க தமிழக பள்ளி கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இனிவரும் கல்வியாண்டுகளில் ஆய்வகப்பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக வெளிப்படையான டெண்டர் முறையை பின்பற்றவும் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்து, நீதிபதிகள், “இதனை பொதுநல வழக்காக தொடர முடியாது” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government schools ,branch , Government schools, book abuse, hire branch of the Madurai
× RELATED அங்கன்வாடி குழந்தைகள் விவரங்களை...