×

சடையன் குப்பம் - ஜோதி நகர் இடையே 8 ஆண்டுகளாக கிடப்பில் மேம்பால பணி பொதுமக்கள் அவதி

திருவொற்றியூர்: மணலி மண்டலத்திற்கு உட்பட்ட சடையன் குப்பம் - ஜோதி நகர் இடையில் 8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மேம்பால பணிகள் இதுவரை முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மணலி மண்டலம் 16வது வார்டுக்கு உட்பட்ட சடையன்குப்பம், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியை ஒட்டி புழல் ஏரி உபரிநீர் கால்வாய் செல்வதால், சடையன்குப்பத்தில்  இருந்து திருவொற்றியூருக்கு செல்வதற்கு  பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக மணலி சாலையை கடந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்.

இதனால், இங்குள்ள மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. மழைக் காலங்களில் இந்த கிராமத்தை மழைநீர் சூழ்ந்துவிடும். அப்போது இந்த கிராமத்தில் இருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில், இங்குள்ள மக்கள் எளிதாக திருவொற்றியூர் செல்லும் வகையில் இந்த உபரிநீர் கால்வாய் மீது மேம்பாலம் அமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் பல ஆண்டாக வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், நெடுஞ்சாலைத் துறை சடையன் குப்பம் - ஜோதி நகர் இடையில், கால்வாய் குறுக்கே மேம்பாலம் கட்ட முடிவு செய்து, கடந்த 2010ம் ஆண்டு பணிகளை துவங்கியது.

ஆனால், 30 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. இந்த மேம்பால பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் பணிகள் முடிந்தபாடில்லை. கால்வாய் மீது கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை, கால்வாயின் இருபுறமும் தரையுடன் இணைக்கும் பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, பாலத்தின் இருபுறமும் இரும்பு நடைமேடை மற்றும் படிக்கட்டுகளை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக அமைத்தது.

ஆனால், இதில் நடந்து செல்பவர்களும் பல சமயங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.  சடையன் குப்பத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் (15) என்ற பள்ளி மாணவன் இரு தினங்களுக்கு முன்பு இந்த இரும்பு நடைமேடையில் நடந்து சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவனுடைய கை முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த  லோகேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபோன்ற அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் இந்த மேம்பாலத்தை உடனடியாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு  விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sapunan Kuppam - Jyoti Nagar ,public , Sadayyan Kuppam, Manali, Thiruvottiyur, Superintendent Work, Public Distress
× RELATED அதிகரித்து வரும் வெயில்...