×

மணல் கடத்தலை தடுக்காத அதிகாரிகளுக்கு ஒய்வு கால பணபலன்கள் ரத்து: ஐகோர்ட் அதிரடி

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், விண்ணமங்கலம், கங்காபுரம் உள்ளிட்ட இடங்களில் ஓடும் செய்யாற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதை தடுக்க கோரி ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பி சவுந்தரராஜன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனு எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோத மணல் கடத்தலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டர் அறிக்கையை தாக்கல் செய்தார்.அதை பார்த்த நீதிபதிகள் மணல் கடத்தல் தொடர்பான எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன, அதில் எத்தனை  பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டது, எத்தனை டன் மணல் பறிமுதல் செய்யப்பட்டன உள்ளிட்ட என்ற விவரம் இல்லை என்று தெரிவித்தனர். இதன்பிறகு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் பிறபித்த உத்தரவு பின்வருமாறு:  மணல் கடத்தலை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இந்த அறிக்கை மூலம் தெளிவாக தெரிகிறது. மணல் மாபியாக்கள், மேல்மட்ட அரசியல்வாதிகளுடனும், உயர் அதிகாரிகளுடனும் நெருக்கமான உறவு வைத்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும்  மணல் குவாரிகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்க வேண்டும்.

மணல் கடத்தலை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படை அதிகாரிகள், ஏசி அறையில் அமர்ந்து கொண்டு ஆலோசனை நடத்துவதால் எந்த பயனும் இல்லை. அவர்கள் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்.  நேர்மையான அதிகாரிகள் தலைமையில் உயர்மட்ட கண்காணிப்பு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தோம் என்று இனி கூறாமல், குற்றச்  செயல்களில் ஈடுபட்ட நபருக்கு கோர்ட்டு மூலம் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்தோம் என்று அதிகாரிகள் கூறவேண்டும். இதற்காக தாலுகா அளவிலான தனிப்படையின் ஒருங்கிணைப்பாளராக செயல்படும் தாசில்தார்கள், மணல் கடத்தை தடுக்க, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கடத்தல்காரர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கும் விதமாக, தாலுகா அளவிலான தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு பதில், இன்ஸ்பெக்டரை உறுப்பினராக நியமிக்கவேண்டும்.

 இந்த பணிகளில் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும், கடத்தல்காரர்கள் மீது  நடவடிக்கை எடுக்காமலும் செயல்படும் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும். அவர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். பணிஓய்வு பண பலன்கள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும். இவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருந்தாலும், அவர்கள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை பிற அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sand Stripping, Canceling Retirement, Payments , Judge, Action
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...