×

முதல் முறையாக நடந்த சந்திப்பில் உறவை வலுப்படுத்த கிம்-புதின் முடிவு : அமெரிக்காவை ஓரங்கட்ட திட்டம்?

விளாடிவோஸ்டாக்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று முதல் முறையாக சந்தித்து பேசினர். இருநாடுகள் இடையே பழங்காலம் முதல் இருந்து வந்த நட்பை பலப்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்- கிம் இடையேயான 2வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், இந்த சந்திப்பு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களை சோதனை செய்து வந்தது. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், தென்கொரியா-வடகொரியா இடையே சுமூக உறவு ஏற்பட்டு கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரில் முதல் சந்திப்பு நடந்தது. இதில் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக கிம் உறுதியளித்தார். அதன்படி, அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் வடகொரியாவில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. பின்னர், வியட்நாமின் ஹனாய் நகரில் டிரம்ப் - கிம் இடையே 2வது சந்திப்பு நடந்தது. இதில், வடகொரியா  மீதான பொருளாதார தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என கிம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு அதிபர் டிரம்ப் எந்த உறுதியும் அளிக்கவில்லை.

வடகொரியாவின் ஆயுத அழிப்பு நடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஈடுபட்டார். இவரது பேச்சு முரணாக இருந்ததால், வடகொரிய அதிருப்தி அடைந்தது. பேச்சுவார்த்தை குழுவில் இருந்த மைக் பாம்பியோவை நீக்க வேண்டும் என வடகொரியா கோரிக்கை விடுத்தது. சர்வதேச பிரச்னைகளை தீர்க்கும் விஷயத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக செயல்படுவது புதினுக்கு பிடிக்கவில்லை. வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என ரஷ்யாவும் கூறிவந்தது. இந்நிலையில், கிம்மை சந்திக்க புதின் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று கிம் நேற்று முன்தினம் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகருக்கு சென்றார். இங்கு இரு தலைவர்களும் நேற்று முதல் முறையாக சந்தித்து பேசினர்.  இந்த பேச்சுவார்த்தை 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. கிம்மின் தாத்தா கிம் 2ம் சங் காலத்தில் இருந்து வடகொரியாவுக்கு, சோவியத் யூனியன் உதவி வந்தது. இந்த நட்பை மீண்டும் பலப்படுத்த கிம்-புதின் முடிவு செய்தனர்.

இது குறித்து பேட்டியளித்த கிம், ‘‘ரஷ்யா உடனான புதிய உறவு மேலும் வலுவடையும் என நம்புகிேறன். இந்த நல்ல சந்திப்புக்காக புதினுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,’’ என்றார். அதிபர் புதின் கூறுகையில், ‘‘இந்த பேச்சுவார்த்தை சற்று விரிவாக நடந்தது. இந்த சந்திப்பு இருநாடுகள் இடையேயான தூதரக மற்றும் பொருளாதார உறவை ஊக்குவிக்கும்,’’ என்றார். பேச்சுவார்த்தையில் என்ன விஷயம் பேசப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. வடகொரியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர், ரஷ்யாவில் பணியாற்றுகின்றனர். வடகொரியா மீதான தடைகளின்படி, இந்த தொழிலாளர்கள் இந்தாண்டு இறுதிக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும். தனது நாட்டு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கும்படி புதினிடம் கிம்  கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் நாட்டாண்மையை முறியடிக்க, ரஷ்யாவுக்கு இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.  

தடையால் உணவு நெருக்கடி

இந்தாண்டு உணவு நெருக்கடியை சந்தித்துள்ளதாக ஐநா.விடம் வடகொரியா கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, வடகொரியாவுக்கு ரஷ்யா 25 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உணவு உதவிகளை அளித்து வந்தது. கடந்த மார்ச் மாதம் கூட 2 ஆயிரம் டன்களுக்கு அதிகமான கோதுமையை வடகொரியாவுக்கு ரஷ்யா சப்ளை செய்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kim ,meeting ,America , Kim-putin decision, strengthen the relationship ,first time meeting
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...