×

பதவி உயர்வு வழங்காததால் இன்ஸ்பெக்டர் ராஜினாமா?: வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டு ஜெயலலிதாவிடம் விருது பெற்றவர்

சென்னை: தனக்கு பதவி உயர்வு வழங்காததால், வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டு ெஜயலலிதாவிடம் விருது பெற்ற சென்னை இன்ஸ்பெக்டர் திடீரென ராஜினாமா மிரட்டல் விடுத்துள்ளார். சென்னை மாதவரத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றுகிறவர் ஜவகர். இவர், வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் இடம் பெற்றிருந்தார். சிறப்பாக பணியாற்றியதற்காக 2004 அக்டோபர் 31ம் தேதி அப்போதைய  முதல்வர் ஜெயலலிதாவால் விருதும், ஒரு பதவி உயர்வும் இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய அரசு இவருக்கு எந்த பதவி உயர்வும் வழங்கவில்லை.  மேலும் மூத்த அதிகாரிகள், கீழ் மட்டத்தில் உள்ள தங்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உள்துறை செயலாளர், முதல்வரின்  கவனத்துக்கு இதைக் கொண்டு செல்வதில்லை என்றும் விருது பெற்ற இன்ஸ்பெக்டர் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், அரசு தங்களை தொடர்ந்து அவமானப்படுத்துவதாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இன்ஸ்பெக்டர் ஜவகர்,  தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அரசு கொடுத்த பதவி உயர்வு, விருது,  ரொக்கப்பணம் மற்றும் வீட்டுமனை ஆகிய அனைத்தையும் முதல்வரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். இது போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆய்வாளர் ஜவகர் தண்டையார்பேட்டை டி.எச். சாலையில் உள்ள வடக்கு இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் ராஜினாமா கடிதம் கொடுப்பதாக  கூறி இருந்தார். அதன்பேரில் பத்திரிகையாளர்கள் இணை ஆணையர் அலுவலகத்தில் கூடினார்கள். இதுபற்றி இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் கேட்டதற்கு, ஆய்வாளர் ஜவகர் ராஜினாமா செய்வதாக எந்த  தகவலும் இல்லை. தற்போது அவர் இங்கு வரமாட்டார், அவர் எங்கு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை என்று கூறினார். ஒரு ஆய்வாளர் பதவி விலக போகிறேன் என்று கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Inspector ,Jayalalithaa , Inspector resigns, promotion, Jayalalithaa
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது